நீலகிரியில் வடகிழக்குப் பருவமழையைப் பார்த்தவன் எவனும் நாத்திகனாக இருக்கமுடியாது. காற்றும், மழையும் இணைந்து பிரவகிக்கும்போது மனது இயற்கையின் பிரம்மாண்டத்தின் முன்பு தலைகுனிந்து நிற்பதை உணர்தல் ஆழ்ந்த ஆன்மிகம்.
“வானமும் தெரியாமல், பூமியும் தெரியாமல், மேகம் சூழ்ந்து வலுத்துப் பெய்யும் இந்த பெருமழைக்காலத்தில், என் ஊரை எப்படிக் கண்டுபிடித்தாய்” என்று சம்பந்தமில்லாமல் கபிலரின் பாடல் நினைவுக்கு வந்தது. கவிதையையெல்லாம் ஒரு மரணவீட்டுக்குப் போகும்போது நினைக்கலாமா தெரியவில்லை. ஆனால் கபிலரை அறிமுகப்படுத்தியதே சரவணன்தான் என்று நினைத்தபோது, அவன் மரணத்திற்கு இப்படி நினைப்பது தவறில்லை என்றும் ஆழ்மனம் சொல்லியது.
‘நாங்க பொறந்துலேர்ந்தே ஃப்ரெண்ட்ஸ்’ என புதிதாக அறிமுகம் செய்யும் எல்லோரிடமும் சொல்லிக்கொள்வான். அதில் உண்மையில்லாமல் இல்லை. எனக்கும் அவனுக்கும் 2 மணி நேரங்கள் மட்டுமே பிறந்த நேரத்தின் இடைவெளி. ஒரே ஹாஸ்பிடல், ஒரே பிறந்த நாள், ஒரே நட்சத்திரம், ஒரே தொடக்கப்பள்ளி, ஒரே மேனிலைப்பள்ளி, ஒரே தெரு, ஒரே விளையாட்டு மைதானம் என்று சேர்ந்தே வளர்ந்தோம்.
எப்படிப் பிறந்ததில் எனக்கு முந்திக்கொண்டானோ, அதே போலவேதான் வாழ்விலும். எல்லா வகுப்பிலும் அவனே முதல் ரேங்க். எல்லா விளையாட்டுப் போட்டிகளுக்கும் போவான். ஜெயிப்பான். கவிதை, கட்டுரை, பேச்சு என தன் முன்னே கொடுக்கப்படும் அத்தனை வாழ்வியல் சவால்களையும் ஆர்வமோடு ஏற்றுக்கொண்டு, அதன் உச்சத்துக்குப் போவதில் முனைப்போடு இருப்பான். ஆரம்பத்தில் இவற்றிலெல்லாம் எனக்கும் பெருமை இருந்தது. என் நண்பனின் உயரம் என்னுயரம் என்ற விதத்திலேயே அதனை எடுத்துக்கொண்டேன்.
having read your work for sometimes the ending is somewhat predictable..yet what a recount..superb sir