11. புறப்பாடு
அறுவை சிகிச்சை நிபுணரும் அரசாங்க மருத்துவருமான ஜோன்ஸ், கோயம்புத்தூர் வந்து சேர்ந்த பிறகு சல்லிவனின் மனோதைரியம் இன்னும் பெருகியிருந்தது. இயல்பாகவே அவருக்கு மனவெழுச்சியும், உத்வேகமும் அதிகம்தான் என்றாலும், சமீப நாள்களாக மலையேற்றத்துக்கு எல்லாப் பக்கத்திலிருந்தும் திரண்டு வரும் எதிர்ப்பு அவரை என்னவோ செய்திருந்தது. ஜோன்ஸ் அந்த இடைவெளியை நிரப்பியிருந்தார். அவர் கையோடு கொண்டு வந்திருந்த மன்றோவின் கையெழுத்திடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையை நகல் செய்து ஆங்கிலேய அதிகாரிகளுக்கும் பணியாளர்களுக்கும் அனுப்பினார். ஒவ்வொரு குழுவுக்கும் தனித்தனியாகச் சந்திப்புகளை ஏற்பாடு செய்தார்.
இந்த மலையேற்றம் என்பது இனி சல்லிவனின் கனவு, சல்லிவனின் திட்டப்பணி, சல்லிவன் செய்யும் சாகசம் என்றெல்லாம் சொல்லி ஒதுங்கிப் போக முடியாது, போகவும் கூடாது. இது அரசாங்கத்தின் கனவாக மாறியிருக்கிறது. இதைப்பற்றி மதராஸில் பலமட்டக் கூட்டம் போட்டு, இங்கிலாந்து வரை தகவல் சொல்லப்பட்டு, மாட்சிமை தங்கிய மகாராஜாவின் கையொப்பத்தோடும் உத்தரவாதத்தோடும் நிகழ்த்தப்படும் திட்டம்.
இதில் வெற்றி பெற்றுத் திரும்பும் ஒவ்வொருவருக்கும் ஊக்கத்தொகையும், பதவி உயர்வும் காத்திருக்கின்றன என்பதை அழுத்தம்திருத்தமாக உணர்த்தினார். சல்லிவன் போல உர்ரென்ற முகமும், அதிகாரத் தொனியும், விரல்களை உயர்த்தி சட்டாம்பிள்ளை போலப் பேசும் குணமுமற்றவர் ஜோன்ஸ். ஒவ்வொரு வாக்கியத்தின் இறுதியிலும் முற்றுப்புள்ளிக்குப் பதிலாகப் புன்னகையை வைத்திருந்தார்.















Add Comment