14. முதற்கனி
மூன்று ஆங்கிலேயர்கள் வீழ்ந்து இறந்ததில் மொத்தக் குழுவும் அதிர்ந்து போனது. என்ன நடந்ததென்று உணர்வதற்கு முன்பே, அத்தனையும் முடிந்து அடங்கிவிட்டது. குழப்பமும், கோபமும், சோகமும், அதிர்ச்சியும் சூழ மொத்தக் குழுவினரும் சோர்வுற்றுப் போயினர். அங்கேயே தரையைச் சமன்படுத்தி, பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து டெண்ட் அடித்து, இரவுத் தங்கலுக்கான வேலைகள் ஆரம்பமாயின. யாரும் முழு மனதோடு வேலை செய்யவில்லை.
அடுத்து என்ன செய்யவேண்டும், என்ன சொல்ல வேண்டும் என்று எதுவும் தோன்றவில்லை. யாரும் எதுவும் பேசவில்லை. வேலைகள் அமைதியாக நடந்து கொண்டிருந்தன. இது புயல் முடிந்த பின் வந்ததனால் ஏற்பட்ட அமைதியா, இல்லை இனி வரப்போகும் புயலுக்கு முந்தைய அமைதியா என்று லூயியும், ஜோன்ஸும் ஒருவர் முகத்தை ஒருவர் குழப்பத்தோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.
எல்லோரையும் அச்சம் பீடித்திருந்தது. ஒவ்வொரு மனமும் மலையேறும் முன் பழங்குடியினரின் தீவிரமான பிரச்சாரத்தை நினைத்துக்கொண்டிருந்தது. மலைத் தெய்வங்கள் மிகவும் வலுவானவை. வீரியம் கொண்டவை. அவற்றை எதிர்த்துக்கொண்டு மேலே ஏறி வருபவர்களை அவை பழிவாங்கும் என்ற வார்த்தைகள் எதிரொலித்துக்கொண்டிருந்தன. அனைவரும் உண்ணக்கூட மனமில்லாமல் ஆங்காங்கே விரக்தியில் அமர்ந்தும், படுத்துமிருந்தனர். தகுந்த ஊக்கமின்றி அடுத்த நாள் அவர்கள் ஓரடி கூட நகர மாட்டார்கள் என்பது புரிந்துபோனது. ஏதேனும் செய்யவேண்டும். என்னவென்றுதான் தெரியவில்லை. அனைவரும் குழம்பியிருந்தார்கள்.















Add Comment