19. மன்றோ வருகை
மலை ஏறி வரும் வரையில்தான் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பணிகள் மாதக்கணக்கில் திட்டமிடப்பட்டு, வாரக்கணக்கில் செயல்படுத்தப்பட்டு, மிக நிதானமாக, பொறுமையாக நடந்தன. ஏறிவந்த பின்னர் ஒவ்வொரு நாளும் ஆக்கப்பூர்வமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுக் கொண்டே இருந்தன. அன்றிலிருந்து அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்குச் செய்ய வேண்டிய பணிகள் வரிசைப்படுத்தப்பட்டன. அத்தியாவசியத் தேவைகள் ‘முதல் சில ஆண்டுகளில் செய்து முடிக்கவேண்டியவை’ என்று வகைப்படுத்தப்பட்டு அவற்றுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது.
சல்லிவனின் குழந்தை இறந்தபின்னர், மருத்துவமனைக்கான அத்தியாவசியம் பற்றிய பேச்சுக்களும் திட்டவரைவும் தயாரிக்கப்பட்டன. தற்காலிக மருத்துவமனை ஒன்றும், அத்தியாவசிய மருந்துகள், அவசரக்காலத்துக்கென சில திட்டங்களும் உடனடியாகச் செயல்படுத்தப்பட்டன. ஆனால் அது ஊட்டியின் சீதோஷ்ணம் பாதுகாப்பானதுதானா என்ற கேள்வியை மீண்டும் தீவிரப்படுத்தியது. சல்லிவனுக்கு அதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் வந்தது. மகனின் மரணத்துக்குப் பிறகு மனைவியிடமிருந்தே அங்கே தங்கள் வாழ்க்கையைத் தொடர்வது பற்றிய எதிர்ப்பு வந்தது. மீண்டும் சல்லிவனுக்கு எதிரான குறுங்குழுக்களின் கை ஓங்கியது. சல்லிவன் பிரிட்டிஷின் பணத்தைத் தன் சுயநலத்துக்குப் பயன்படுத்துகிறார் என்று அவர்கள் வழக்கு தொடுத்திருந்தனர்.














Add Comment