23. ஸ்னூட்டி ஊட்டி
1850இல் இந்தியாவெங்கும் பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு புதிய சட்டத்தை அமல்படுத்தியது. புதிய குடியேற்றம் நடக்கிற மலைப்பிரதேசங்களில் தன்னாட்சி அதிகாரங்களை ஏற்படுத்துவது. அவற்றை நகராட்சிகளாக மாற்றுவது. அங்கே அதிகாரத்துக்குத் தனிக்குழுவை அமைப்பது. அங்குள்ள சூழலுக்கேற்ப, வாழும் மக்களுக்கேற்ப வரிகளை விதித்துக்கொள்வது. அந்த வரிகளையும், ஈட்டப்படும் வருமானங்களையும் வைத்துக்கொண்டே அதன் நிர்வாகத்தை நடத்துவது. மாகாணங்களிலிருந்து பணம் கேட்பதைப் பெரும்பாலும் நிறுத்திக்கொள்வது என்பது உள்ளிட்ட உபகாரணிகளைக் கொண்ட சட்டம் அது.
அதுவரையில் நீலமலையின் தேவைகள் அனைத்துக்கும் பெரும் பணத்தை பிரிட்டிஷ் வழங்கிக்கொண்டேயிருந்தது. கிட்டத்தட்ட நாற்பதாண்டுகள் முதலீடுகள் மட்டுமே நீலமலைக்கு வழங்கப்பட்டுக்கொண்டிருந்தன. இனி அறுவடை செய்யும் காலம் வந்துவிட்டிருக்கிறது என்று பிரிட்டிஷ் உணர்ந்து கொண்டது. ஆகவே உதகமண்டலத்தைச் சட்டப்படியான நகராட்சியாக 1866ஆம் ஆண்டு முறைப்படி அறிவித்தது.
ஆகவே அன்றுமுதல் நீலமலையில் நீர் வரி, வீட்டு வரி முதலிய மாகாணங்களின் பிற பகுதிகளைப்போல வரிவிதிப்பு முறை அமுலுக்கு வந்தது. இது அங்குள்ள மக்களைத் துணுக்குறச் செய்தது. முதலில் அந்த அறிவிப்பு செய்யப்பட்டபோது அது மலையேறி வந்த ஆங்கிலேயர்களுக்கு மட்டுமான விதி என்றே நினைத்தார்கள். அடுத்த மாதம் ஹட்டிகளுக்கெல்லாம் சென்று தண்டோரா போடப்பட்டது. ஊர்த்தலைவர்களை அழைத்து எழுத்துப்பூர்வமான அறிவிப்பு வழங்கப்பட்டது. மக்கள் கொதித்துப்போனார்கள்.















Add Comment