121 டைப்பிங்
அட்டன்டன்ஸ் ரெஜிஸ்டரில் இனிஷியல் போட்டுவிட்டு இருக்கைக்கு வந்து ஜோல்னா பையை நாற்காலியின் முதுகில் தொங்கவிட்டு அமர்ந்து, முழங்கை மடங்கலில் சுருக்கங்களுடன் இருந்த, பட்டையாக மடித்துவிட்டிருந்த குர்த்தா கைகளை சரிபண்ணிக்கொண்டு, ஆசுவாசப்படுத்திக்கொண்டபோது ஹாலின் மறுகோடியில் இருந்த கூலருக்கு முன்னாலிருந்த டைப்ரைட்டர் எதிரில் ஃப்ரான்ஸிஸ் மாற்றலாகிப் போய் காலியாக இருந்த நாற்காலியில் ஒரு பையன் அமர்ந்திருப்பது தெரிந்தது.
பார்த்தமுகமாக இல்லாததால் யாரோ என்று இவன் அலட்சியமாக பேப்பரை விரித்து சீக்கிய தீவிரவாதிகளால் நடுவானில் வெடித்துச் சிதறடிக்கப்பட்ட விமானத்தைப் பற்றி வெளியாகியிருந்த படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
ரவிசங்கர் என்று எதிரில் மென்று முழுங்கிய குரலில் கேட்கவும் இவன் தலையை நிமிர்த்திப் பார்த்தான். எதிரில் மறுகோடி நின்றுகொண்டிருந்தது. அவன் ரவிசங்கரைக் கேட்கிறான் என்று நினைத்துக்கொண்டு, ‘அப்படி யாரும் இந்த ஆபீஸ்ல இல்ல’ என்றான்.
‘லேது சார்’ என்று ஆரம்பித்து தெலுங்கும் இங்கிலீஷும் கலந்து ரவிசங்கர் என்று தன் நெஞ்சைத் தொட்டுக் காட்டவும் இவன் உட்கார்ந்தபடிக்கே ‘ஓகோ’ என்று சொல்லிவிட்டு யார் என்ன என்று எதுவும் கேட்காமல் திரும்ப பேப்பரில் வெளியாகியிருந்த செய்திகளை நிதானமாகப் படிக்கத் தலைப்பட்டான்.
Add Comment