48 உயரம்
வண்டி நின்றதும் இறங்கிக்கொண்டவன், வெளியேறும் கும்பலோடு கும்பலாய் அவன் பாட்டுக்கும் விறுவிறுவென நடந்தான். பொம்மைபோல கைநீட்டிக்கொண்டு இருந்தவரிடம் போகிறவர்கள் டிக்கெட்டைக் கொடுத்துவிட்டுப் போய்க்கொண்டு இருந்தார்கள். அவரைக் கடந்ததும் அடச்சே என்று ஆகிவிடவே நடையை நிதானப்படுத்திக்கொண்டான்.
‘ஜே ஜே சில குறிப்புகள் படிச்சிருக்கீங்களா ஜேகே’ என்று கேட்டதற்கு, ‘ஜவுளிக்கடை எப்படி நல்லா போகுதா’ என்று ஜெயகாந்தன் நக்கலாகத் திருப்பிக் கேட்டதிலிருந்து, ‘அவங்க கடைல பண்டிகைக்குத் துணி எடுத்திருக்கோம். ஆனா கட ஓனர், இவ்ளோ பெரிய எழுத்தாளர்னு தெரியாது’ என்று, ஞாநி வீட்டில் பிரசாதம் தொகுப்பைக் கையில் வைத்துக்கொண்டு சொன்ன அந்தப் பக்கத்துக்காரனான பாலா சிங் வரை, பலர் மூலமாகவும் நாகர்கோவிலில் சுந்தர ராமசாமி ஜவுளிக்கடை வைத்திருப்பவர் என்பது தெரியவந்திருந்தது. கடைப் பெயரைக்கூட கேள்விப்பட்டது போலத்தான் இருந்தது. ஆனால் சரியாகத் தெரியவில்லை. நாகர்கோவிலிலேயே அதுதான் பெரிய ஜவுளிக்கடை என்று சமயவேலோ திலீப்போ யாரோ சொல்லி நினைவில் பதிந்திருந்தது.
கடையின் பெயர் தெரியாமல் என்னவென்று சொல்லிக் கேட்பது என்று யோசனையாக இருந்தது.
இந்த ஊர்ல பெரிய துணிக்கடை எது என்று, பழகியவரிடம் கேட்பதைப்போல எதிரில் வந்தவரிடம் கேட்டான். அவனுக்கே அது அசட்டுத்தனமாகப் பட்டது.
Add Comment