45 பார்வைகள்
தேவை இருந்தால் தவிர – தெரிந்தவர்கள் என்பதற்காக மட்டுமே – வளர்ந்தவர்கள் யாரும் யாரையும் சும்மா தேடிப்போவதில்லை. தேடிப்போய் பார்க்கிற அளவுக்கு நமக்குப் பிடித்தவராக இல்லாதிருந்தாலும் நம்மை இவருக்குப் பிடிக்கிறது என்று பட்டுவிட்டால், இளைஞர்கள் பெரியவர்களைத் தேடிப்போகிறார்கள். மற்றவர்களைப் பற்றி உறுதியாகச் சொல்லமுடியாவிட்டாலும் தான் அப்படித்தான் இருப்பதாக நினைத்தான்.
எழுதத் தொடங்கியதிலிருந்தே பாராட்டி ஊக்கப்படுத்திக்கொண்டிருந்த தமிழவனைப்போலவே, வில்லிவாக்கம் இலக்கு கூட்டத்திலிருந்தே அவனைப் பொருட்படுத்தி, நெருக்கமாக உணரவைத்திருந்தார் என்பதால், ஊட்டியிலிருந்து கீழே இறங்கியதும் நேரே கோவை ஞானியைத்தான் தேடிப்போனான்.
அவர் பேசுவதைவிட அவனைப் பேசவிட்டுக் கேட்டுக்கொண்டிருந்தார். அடுத்தவர் பேசுவதைக் கேட்பதைவிட தன்னை மறந்து பேசிக்கொண்டிருப்பதே அவனுக்கும் பிடிக்கும் என்பதாலும் அவருடன் இருந்தவர்களும் அவன் பேச்சில் ஆர்வம் காட்டிக் கேட்டுக்கொண்டிருப்பதாகத் தோன்றியதாலும் போனது வந்தது என்று எல்லாவற்றையும் கொட்டிக்கொண்டிருந்தான்.
Add Comment