70 சித்தம்
அலைந்தடங்கி ஒரு இடமாய் அமர ஆரம்பித்திருந்த அவனைப்போலவே அவனுடைய ஆபீஸ் வாழ்வும் அமைதியாகத் தொடங்கியிருந்தது என்று பார்த்தால், ஆபீஸுக்கே வராமல் இருந்த ஆங்கிலோ இந்திய ஏஓ ஓய்வுபெற, கணுக்காலுக்குமேல் கைலியைத் தூக்கிக் கட்டுகிற பாய்மார்களைப்போல சேலையைக் கட்டியாகவேண்டிய அளவுக்கு உயரமாக இருந்த மாமி அந்த இடத்திற்கு வந்திருந்தார். அம்மா சொல்வதைப்போல சீதா என்கிற பெயருக்கேற்ப, அவரும் பொறுமையில் பூமாதேவியாகத்தான் இருந்தார். ஆனால் அவரோடு மாற்றலாகி வந்திருந்த இன்னொரு ஆள் அவனுக்குப் பெரிய பிரச்சனையாகப் போகிறார் என்பது அப்போது அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை.
ஓய்வுபெறப்போவதால் அடிக்கடி லீவ் போட்டுக்கொண்டிருந்த ஏஓவின் வேலையை அதிகப்படியாகப் பார்த்துக்கொண்டிருந்த பின்பக்க ரேஞ்சின் சூப்பிரெண்டெண்ட்டான ராமகிருஷ்ணனும் அடுத்து ஓய்வுபெற இருந்ததால், தோன்றியபோது ஆபீசுக்கு வந்துபோய்க்கொண்டு இருந்தார். ஹெட் ஆபீஸிலிருந்து அந்த ஆபீஸ் தள்ளியிருந்ததாலோ இருப்பதிலேயே சிறிய டிவிஷன் என்பதாலோ வேலையும் கம்மி மெளசும் கம்மி என்று துடிப்பின்றிக் கிடந்ததுபோக, யாமிருக்க பயமேன் என்று காலண்டர் அட்டையில் முருகன் இன்முகம் காட்டிக்கொண்டு இருப்பதைப்போல அமினுதீன் ஏசி இருந்தது எல்லோருக்கும் செளகரியமாக இருந்தது. எனவே, எப்போதாவது சூப்பிரெண்டெண்டண்ட் ராமகிருஷ்ணன் வருவதுகூட ஆபீஸே வேடிக்கை பார்க்கும்படியாகத் தள்ளாடியபடி ஆட்டோவில் வந்து இறங்குவதாக இருந்தது. அதுவும் சமயத்தில் இறங்காமல் ஆட்டோவில் இருந்தபடியே அட்மின் சம்பள பில்களிலும் ரேஞ்சின் முக்கியமான ரிப்போர்ட்களிலும் தடுமாறியபடி கையெழுத்துப் போட்டுவிட்டு அப்படியே திரும்பிப் போய்விடுவதாக இருந்தது. ஹாக்கி ஆட்டக்காரனாக இருந்ததால், கறி தின்னாதவனாக இருந்தாலும் உருட்டுக் கட்டையாக இருந்த இன்ஸ்பெக்டர் திலீப்குமார், சூப்பிரெண்ட்டெண்ட்டை கைத்தாங்கலாய் அழைத்துவரவும் கொண்டுபோய்விடவும் வசதியாக இருந்தான். இவனைப்போலவே ஆபீஸ் வேலை பார்ப்பதில் அவனுக்கும் பெரிய ஆர்வமில்லாததால் அவனும் அதை சந்தோஷமாய் செய்துகொண்டிருப்பதாய் இவனுக்குப் பட்டது.
ஆஹா. ஆபீசுக்கே வராமல் அவரோடு சுற்றிக்கொண்டு திலீப் ஜாலியாக இருக்கிறானே என்று பார்த்தால், அப்புறம்தான் தெரியவந்தது அவன் பட்டுக்கொண்டு இருந்த அவஸ்த்தை. அவர் போவதும் வருவதும் அவர் வீட்டிற்கு இல்லை, குடிப்பதற்கென்றே தி. நகரில் எடுத்திருந்த தனி ஃப்ளாட்டுக்கு.
மோகன் சுந்தா என்று பின்னால் இருந்த ஈ ரேஞ்சே திலீப்பை, ‘இன்னைக்கு என்ன கச்சேரி’ என்று கேலிபண்னிக்கொண்டு இருந்தது.
‘நீங்க வேற. அந்த வயித்தெரிச்சலை ஏன் கேக்கறீங்க’ என்று சிணுங்கிக்கொண்டான் திலீப்.
Add Comment