77 எதிர்கொள்ளல்
எப்போதும்போல இரண்டாவது காட்சியாக எதோ ஒரு ஹாலிவுட் படத்தைப் பார்த்துவிட்டு ஜி என் செட்டி ரோடு திருப்பத்தில் ராஜா பாதர் தெருவில் இருக்கும் தள்ளுவண்டிக்கடையில் இரவு உணவாக முட்டைதோசைக்காகக் காத்திருந்தான். கொஞ்சம் தள்ளி சற்று முன் வழியில் வழிகேட்ட பையன் நின்றுகொண்டிருந்தான். அவனை சாப்பிட்டாயா எனக்கேட்டு இவன்தான் கடைக்கு அழைத்து வந்திருந்தான். ஒரு வார்த்தைகூடத் தமிழ் தெரியாத தெலுங்குப் பையன்.
செகண்ட் ஷோவாகப் பார்த்தது, அன்றைக்கு இவன் பார்த்த இரண்டாவது படம். சிவகுமாரின் சென்னை ஃபில்ம் சொசைட்டி போக ICA ஃபோரத்திலும் உறுப்பினராக இருந்தான். மெட்ராஸ் ஃபில்ம் சொசைட்டி அளவுக்கு இது வருடத்திற்கு 200 – 250 படங்கள் போடாது என்றாலும் ஆடிட்டர் ராஜகோபால் பொறுப்பில் இருந்த இண்டியன் சினி அப்ரிசியேஷன் ஃபோரம் சென்னை ஃபில்ம் சொசைட்டியை விட அதிகமாகவே திரையிட்டுக்கொண்டிருந்தது. புத்தகம் படிப்பதைவிட – வார்த்தைக்கு வார்த்தை புரியாவிட்டாலும் – உலகத் திரைப்படங்கள் பார்ப்பது ஒட்டுமொத்தமாகப் புரியக்கூடியதாகவே இருந்தது. இலக்கியங்களைப் போலவே இந்தவகைப் படங்களும் உயரங்களைத் தொடுபவையாகவே இருந்தன. ஆங்கிலத்தில் படிக்கமுடியவில்லையே என்கிற மனத்தாங்கலை பெருமளவில் ஈடுசெய்பவையாக இருந்தன. பல படங்கள், கதை என்ற ஒன்று அவசியமே இல்லை என்று சொல்லாமல் சொல்பவையாக இருந்தன.
அவசரமாக ஒன்றுக்கு வரவே, ஜி என் செட்டி சாலையில் இருக்கிற ஜீவா பூங்காவிற்கு அருகில் சைக்கிளை நிறுத்திவிட்டுப் ‘போய்விட்டு’ வந்தவனிடம் அந்தப் பையன் செண்ட்ரலுக்கு வழி கேட்டான். நேரா போய்க்கொண்டே இரு. ரோடே தன்னால் இடதுகைப் பக்கமாகத் திரும்பும். திரும்ப அதில் நேராகப் போய்க்கொண்டே இரு செண்ட்ரல் வந்துவிடும் என்று பெரும்பாலும் சைகையில் சொன்னான். தெருவிளக்கின் மங்கலான வெளிச்சத்தில் அழுக்காக இருந்தவனின் முகம் பட்டினியில் கிடப்பவன் போல களைத்துப்போய் பார்க்கப் பாவமாக இருந்தது. சரி என்று தலையாட்டிவிட்டு தாண்டிப் போனவனைக் கைதட்டி அழைத்தான். வந்தவனிடம் சாப்பிட்டாயா என சைகையில் கேட்டான். அவன் மையமாகத் தலையாட்டிவைத்தான்.
Add Comment