73 கிளுகிளுப்பு
ஏதோ ஒரு நினைப்பில் நம்பியிடம் சொல்லிவிட்டானே தவிர, பத்மா பெங்களூர் போகப்போவதாய் அவனிடம் சொன்னதுதான். அவள் போனாளா இல்லையா என்பதுகூட அவனுக்குத் தெரியாது. பெண்களைப் பற்றி எல்லோருக்கும் இருக்கிற கிளுகிளுப்புதான் அவனுக்கும் இருந்ததே தவிர, நம்பி சிரித்ததைப்போல பத்மாவை நன்கு தெரியும் என்பதைத் தாண்டி விசேஷமாகச் சொல்லும்படி ஒன்றுமில்லை. அப்படிச் சொல்வதென்றால் மலையாள ஆண்ட்டியைத்தான் சொல்லவேண்டும். அவரைப் பற்றி நம்பிக்குத் தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை.
‘விவாதிக்கப்படுவதைப் பெண்கள் விரும்புவதில்லை’ என்று ஷங்கர் ராமன் சொல்வான். அவனுக்கு இருக்கிற அவனைத் தேடி வருகிற சிநேகித சிநேகிகளுக்குக் கணக்கேயில்லை. யார் மூலம் அவனுக்கு யார் நண்பரானாலும் சரி, அவர் அறிமுகப்படுத்தியவரைவிட அவனுக்கு நெருக்கமாகிவிடுவார். ஷங்கர் ராமனின் அண்ணன் பலராமன் வாய்விட்டே புலம்புவார், ‘டேய் படவா என் ஃப்ரெண்ட்ஸை எல்லாம் திருடிக்கிறே. இரு உன்னைத் தனியா வெச்சுக்கறேன்’ என்று. அதற்கு முக்கியக் காரணம் ஷங்கர் ராமன் யாரைப் பற்றியுமே தவறாகப் பேசுவதில்லை என்பது மட்டுமல்ல யாரைப் பற்றியுமே பேசுவதில்லை என்பதும் யாராவது யாரையாவது நல்லாதாக அரை வார்த்தை சொல்லிவிட்டால் அவரை சந்திக்கும் முதல் தருணத்திலேயே அதை நான்காகச் சொல்லிவிடுவான். அவனுக்கு இவன் நேரெதிர். தப்பாக யாராவது யாரைப் பற்றியாவது தவறிப்போய்ச் சொல்லிவிட்டால்கூட இவன் சைக்கிள் தவறாகச் சொல்லப்பட்டவரைத் தானாகத் தேடிப்போகும். தவறாகச் சொன்ன விஷயத்தை மட்டுமின்றி சொன்னவர் பெயர் முகவரியோடு சொல்லாவிட்டால், அது இவன் அகராதில் பொய் சொன்னதற்குச் சமம். ஆனாலும் வாயே ஓயாத இவனுக்கு வாயே திறக்காத ஷங்கர் ராமனே நெருக்கம்.
வாயைப் போலவே இவன் சைக்கிளுக்கும் ஓய்வில்லை. எதேச்சையாக எந்த ஏரியாவைக் கடந்தாலும் அங்கிருக்கிற தெரிந்தவரைப் பார்க்காமல் வண்டி நகராது. சைக்கிள் இல்லாத, வேலைக்குப் போக ஆரம்பிக்காத காலத்திலும் அப்படித்தான். பஸ் பாஸ் இருக்க கவலை ஏன் என்று திரிந்துகொண்டிருந்தான். தேடித் தேடிப் போயே எல்லாவற்றையும் தெரிந்துகொண்டிருந்தான். பேசிப்பேசியே வளர்ந்துகொண்டிருந்தான்.
Add Comment