68 ஈட்டி
இல்லாததற்காக ஏங்குவதோ இழந்ததை எண்ணி அழுவதோ அவன் இயல்பிலேயே இல்லை என்றாலும் கையில் காசில்லாமல் போகும்போதெல்லாம் டிவி வாங்கித் தருகிறேன் என்று ஆயிரம் ரூபாயை அபேஸ் பண்ணிவிட்டு ஓடிய ரங்கன் துரைராஜ் நினைவு வருவதை மட்டும் அவனால் தவிர்க்க முடியவில்லை. அப்போதும் வருத்தத்தைவிட கோபம்தான் பொங்கி வந்தது. எவ்வளவு சுலபமாக ஏமாற்றிவிட்டான் என்கிற கோபம். முன்பின் தெரியாதவனிடம் இவ்வளவு எளிதாக ஏமாந்துவிட்டோமே என்கிற அவமானம் உண்டாக்கிய கோபம்.
மாற்றலில் இருந்தபோதாவது அவன் எங்கோ மெட்ராஸில் இருக்கிறான் நாம் எங்கோ ஈரோட்டில் இருக்கிறோம். இங்கிருந்துகொண்டு என்ன செய்யமுடியும் என்று தேற்றிக்கொண்டு சும்மா இருந்ததிலாவது கொஞ்சம் நியாயம் இருந்தது. மெட்ராஸுக்கு மாற்றலாகி வந்துவிட்டதையே பெரிய சாதனைபோல எண்ணிக்கொண்டு ரங்கன் துரைராஜ் பற்றிய நினைப்பேயின்றி எப்படி ஜாலியாகத் திரிந்துகொண்டிருக்கிறோம் என்று தன் மீதே அவனுக்குக் கோபம் வந்தது.
புதுடெல்லிக்குப் போய் அகன்ற சாலைகளையும் கோட்டை கொத்தளம்போல் இருந்த பெரிய பெரிய கட்டடங்களையும் பார்த்துவிட்டு வந்ததில் அவன் அலுவலகம் இருட்டு கக்கூஸ்போல தோன்றிற்று. அய்யோ இங்கேயா என்று இன்னும் நான்கு நாளைக்கு லீவை நீட்டித்து எழுதிக்கொடுத்துவிட்டு, ஆளைவிடுங்கடா என்று டிரைவ் இன்னில் வந்து உட்கார்ந்துகொண்டான்.
நுங்கம்பாக்கம் ஆபீஸைப்போல தேனாம்பேட்டையில் எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை. கண்ணுக்குத் தெரியாத யாரோ மேலே உட்கார்ந்து மூச்சுவிடமுடியாமல் மென்னியை அழுத்திக்கொண்டு இருப்பதைப்போல இங்கே இல்லை என்றாலும் பத்து நாள்கள் ரயில் பஸ் என்று எந்தக் கவலையுமின்றி திரிந்துகொண்டு இருந்துவிட்டு வந்து உடனே ஆபீஸுக்குள்போய் அடைந்துகொள்ளப் பிடிக்கவில்லை. ஆனால், ஆபீஸ் போகாமல் இப்படி வெளியில் இருந்தால் பணம் அதிகமாகத் தேவைப்படுவதும் கஷ்டமாக இருந்தது. ஆபீஸில் இருக்கும்போது ஆவதைவிட வெளியில் இருக்கையில் செலவு அதிகமாக ஆகிறது என்பதால்தான் எல்லோரும் நாள் தவறாமல் ஆபீசுக்குள் போய் அடைந்துகொள்கிறார்கள்போலும் என்று தோன்றிற்று.
Add Comment