63 நிலவரம்
டைப்பிங் சீட் பாக்கறீங்களா.
டைப்பிங் தெரியாதே.
டைப்…பிங்… தெரியாதா. டைப்பிங் தெரியாம ஈரோட்ல எல்டிசியா என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க.
ஃபைல் ரெக்கார்டிங்.
அந்த ஆபீஸ் திறக்கப்பட்டே இன்னும் முழுதாக நான்கு வருடங்கள் முடியவில்லை என்பதை ஏசி அறைக்கு வெளியில் இருந்த பலகையே கொட்டை எழுத்துக்களில் சொல்லிக்கொண்டு இருந்தது. எனவே, மூட்டைக் கட்டித் தூக்கிப்போடும் அளவிற்கு அங்கே ஃபைல்கள் இன்னும் பழையதாகி இருக்கவே வாய்ப்பில்லை. அப்புறம் எங்கிருந்து ரெக்கார்டிங்.
‘இங்க ஃபைல் ரெக்கார்டிங் மியூசிக் ரெக்கார்டிங்குக்கெல்லாம் வேலையேயில்லை’ என டிஓஎஸ் கிண்டலாகக் கூறவும் அடுத்திருந்த டேபிள்கள் சிரித்தன.
ஈரோடு ஆபீஸில்கூட ‘ரெக்கார்டிங்’ நடந்ததற்குக் காரணமே வேறு. அலுவலகத்திற்குள் நுழைந்ததுமே – நுழைகிறவர்களில் அனேகமாய் அவனே கடைசி ஆளாக இருப்பான் என்பதால், அதை மறைக்க எதையாவது பேச ஆரம்பித்து அரை மணி ஒரு மணி நேரத்தை ஓட்டிவிட்டு டீ சிகரெட் என்று வெளியில் கிளம்பிப் போய்விடுவான்.
Add Comment