காலையில் சென்ட்ரலில் வந்து இறங்கியவனுக்கு, நம் இடத்திற்கு வந்துவிட்டோம் என்று பறப்பதுபோல குஷியாக இருந்தது. இருள் பிரியப்போவதற்கான அறிகுறிகள், இடப்பக்கம் கூடவே வந்துகொண்டிருந்த வானத்தில் லேசாகத் தெரிய ஆரம்பித்திருந்தன. வானம் எப்படிக் கூட வரும். வருவதைப்போல இருப்பது தோற்ற மயக்கம்தானே என்று சிரிப்பு வந்தது. காவி கட்டிக்கொண்டிருக்கையில் இப்படியெல்லாம் தோன்றினால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
நகர ஆரம்பித்துவிட்ட வண்டியைப் பிடிக்க ஓடுகிற, அசோகமித்திரனின் காலமும் ஐந்து குழந்தைகளும் குடும்பஸ்தனைப்போல, வந்து நின்ற ரயிலில் இருந்தும் ஜனங்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள். வேகம், வேகம், வேகம்தான் மெட்ராஸ். பாண்டிச்சேரி அளவுக்கு இல்லையென்றாலும் ஈரோடும் மந்தமாகத்தான் இருக்கிறது. வேகம்தான் அவனுக்கும் பிடிக்கிறது என்றாலும் இந்த விடியற்காலையில் இத்தனை வேகவேகமாகப் போய் இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள். வண்டியில் தூங்கியது போதாதென்று வீட்டிற்குப்போய் குட்டித்தூக்கம் போட ஏன் இவ்வளவு அவசரம். தான்கூட வேகமாக நடப்பதாய் படவே, நின்று சிகரெட்டைப் பற்றவைத்து நிதானப்படுத்திக்கொண்டான். சிகரெட்டைக்கூட நிதானமாக இழுத்து விடுவதுதான் நன்றாக இருப்பதாகப் பட்டது.
Add Comment