23 வாழ்வது எப்படி
அம்மாவுடன் வாழ முடிந்தால், யாருடனும் வாழ்ந்துவிட முடியும் என்று சமயங்களில் தோன்றும்.
இத்தனைக்கும் பிறந்தது முதல் அம்மாவுடன் மட்டுமே வாழ்ந்துகொண்டிருப்பவனாக அவன் இருந்தான். அம்மா வழி தாத்தா பாட்டியைப் பார்த்த நினைவே இல்லை. அவனுக்கு மூன்று வயதாகும்போதுதான் அவளுடைய அப்பா இறந்ததாகவும் அதற்குப் பிறகுதான் அவன் பேசவே ஆரம்பித்ததாகவும் அம்மா சொல்வாள். தனக்கென்று அப்பா அம்மா என யாருமே இல்லை, அதனால்தான் அவர் தன்னை இவ்வளவு துச்சமாக நடத்துகிறார் என்று, அப்பாவுடன் சண்டை வந்து அடிவாங்கும்போதெல்லாம் சொல்லி அழுவாள்.
Add Comment