106. நேரு – ராஜாஜி கருத்து வேறுபாடுகள்
டிசம்பர் 15-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை மூன்று மணி. இந்தியாவின் இரும்பு மனிதர் இதயத் தாக்குதலுக்கு உள்ளானார். நினைவு தப்பியது. சுமார் நான்கு மணி நேரம் கழித்து அவருக்கு நினைவு திரும்பியது. “தாகம்! கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள்!” என்று கேட்டார். மகள் கொடுத்த தண்ணீரை அருந்தியதும், “ரொம்ப இனிப்பாக இருக்கிறதே!” என்றார். அந்த இனிப்புக்குக் காரணம், மகள் மணிபென் அப்பாவுக்கு கங்கைத் தண்ணீரில் தேன் கலந்து கொடுத்ததுதான்!
மீண்டும் படேல் நினைவிழந்தார். காலை மணி 9.37. படேலின் உயிர் பிரிந்தது.பாராளுமன்றத்தில், நேரு, சர்தார் படேலின் மறைவு குறித்த தகவலை அறிவித்தார். “இன்று காலை 9.37 மணிக்கு வல்லபாய் படேலின் வியக்கத்தகு வாழ்க்கை முடிவுற்றது. புதிய இந்தியாவின் சிற்பி என்றே அவர் இந்திய வரலாற்றில் இடம்பெறுவார்! இந்திய சுதந்திரப் போராட்டத்தில் நமது படைகளின் தளபதி அவர். சிக்கல்களின்போது நமக்குத் தைரியமான தீர்வுகளை அளித்த நண்பர்!” என்று புகழஞ்சலி செலுத்தினார்.
Add Comment