149. புகார்ப் பட்டியல்
இந்தியாவின் புகழ் பெற்ற பள்ளிகளில் ஒன்று டேராடூனில் இருக்கும் டூன் ஸ்கூல். என்றாலும், அங்கே படித்த சஞ்சய் காந்தி படிப்பில் படு சுமார் ரகம்தான்.
தன் பேரன்களுக்காக எந்த விதமான சிறப்பு சலுகையும் காட்டக் கூடாது என்று நேரு தரப்பில் இருந்து பள்ளி நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டது.
டூன் ஸ்கூலில் ஓர் ஆசிரியர் இருந்தார். அவரிடம் ஒரு பழக்கம். வகுப்பில் கேள்விகள் கேட்கிறபோது, மாணவர்கள் சரியான பதில் சொன்னால், அந்த மாணவனை அவன் ஏற்கனவே உட்கார்ந்திருக்கும் பெஞ்சுக்கு முன்னால் இருக்கும் பெஞ்சில் உட்கார வைப்பார்.
வகுப்பில் சக மாணவர்கள் பலர், முன் பெஞ்சுக்கு முன்னேறிக் கொண்டிருந்தாலும், வகுப்பில் சஞ்சய் காந்தி நிரந்தரமாக கடைசி பெஞ்ச்தான்!
டூன் ஸ்கூலில் பள்ளிக் கூடத்திலும் சரி, ஹாஸ்டலிலும் சரி, சஞ்சய் எப்போதுமே தனிமை விரும்பியாகவே இருந்தான். அவனுக்கும் யாருடனும் நட்பு ஏற்படுத்திக் கொள்ள ஆர்வம் கிடையாது; அவன் எப்போதும் தனித்தே இருந்ததால், அவனுடன் நட்பு கொள்ள மற்ற மாணவர்களும் ஆர்வம் காட்டவில்லை.
Add Comment