152. பன்ஸிலாலின் ஏமாற்று நாடகம்
1966 டிசம்பரில் சஞ்சய் காந்தி கார் ஓட்டுவதற்குரிய லைசென்ஸ் இல்லாமல் கார் ஓட்டிய குற்றத்துக்காக பிரிடிஷ் போலிசிடம் மாட்டிக் கொண்டார். ஒரு மன்னிப்புக் கடிதம் கொடுத்ததன்பேரில், அவரைக் கைது செய்து கோர்ட்டில் நிறுத்தாமல், அபராதத்துடன் விட்டுவிட்டார்கள்.
வேறு ஒரு சமயம் அதிவேகமாக கார் ஓட்டிச் சென்று இரண்டு முறை கார் பல்டி அடித்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக சஞ்சய்க்கு ஆபத்து ஏதும் நிகழவில்லை.
மூன்றாண்டு அபரென்டிஸ்ஷிப்புக்காக ரோல்ஸ் ராய்ஸ் கம்பெனியில் சேர்ந்த சஞ்சய் இரண்டு ஆண்டுகள் முடிவுற்ற நிலையில், “நான் எல்லாவற்றையும் தெரிந்துகொண்டுவிட்டேன். இனி இங்கே கற்றுக்கொள்ள ஒன்றுமில்லை! இனிமேலும் இங்கே தொடர்வது வேஸ்ட்” என்று சொல்லிவிட்டு, புறப்பட்டுவிட்டார்.
குலாபி பாக் ஏரியாவில் அர்ஜுன் தாஸ் என்ற நண்பருபோடு சேர்ந்து சஞ்சய் காந்தி தொடங்கிய “மாருதி” கார் ஒர்க் ஷாப்பில் நாளின் பெரும்பகுதியை செலவிட்டார்கள் இரண்டுபேரும்.
சஞ்சய் காந்திக்கு நண்பர் ஆனதன் பலனாக அர்ஜுன் தாஸ் பிரதமர் இல்லத்தில் சுதந்திரமாக வளைய வந்தார். பல நாள்கள், அர்ஜுன் தாஸ் பிரதமர் இல்லத்தில்தான் சஞ்சயோடு மதிய உணவு சாப்பிடுவார்.
Add Comment