172. கட்டாயக் கருத்தடை
நெருக்கடி நிலை காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகள் ஒடுக்கப்பட்டன. சட்டப்பூர்வமாகத் தொழிலாளர்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் வழங்கப்பட்ட உரிமைகள் கூட மறுக்கப்பட்டன. வேலைநிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. தொழிற்சாலைகளில் தொழிற்சங்கங்களுக்குப் பதிலாக இருதரப்பு கவுன்சில்கள் அமைக்கப்பட்டு, முதலாளிகளும், தொழிலாளர் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்தித் தொழிலாளர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர்.
இந்தக் கவுன்சில்கள் தொழிலாளர்களது ஊதிய உயர்வு, போனஸ் போன்றவற்றில் ஊழியர்களுக்குத் திருப்தி அளிக்கும் வகையில் முடிவுகள் எடுக்கவில்லை என்றபோதிலும் எதிர்ப்புக் குரல் கொடுக்க முடியாத சூழ்நிலைதான் நாட்டில் நிலவியது. அதையும் மீறித் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபோது போலிஸ் புகுந்து ஏராளமானவர்களைக் கைது செய்தது.
உதாரணமாக, 1976இல் கம்யூனிஸ்ட் சார்புத் தொழிற்சங்கமான ஐ.என்.டி.யூ.சி. ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டபோது, முப்பதாயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். பெங்களூரில் சுமார் எட்டாயிரம் தொழிலாளர்கள் பணியாற்றிய அரசு நிறுவனமான இந்தியன் டெலிஃபோன் இண்டஸ்டிரீஸ் நிர்வாகம் வழக்கமான 20% போனஸுக்கு பதிலாக 8% மட்டுமே அளிக்க முன்வந்தபோது, அதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது போலிஸ் தடியடி நடத்தி, பல தொழிலாளர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தது. நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட விடுமுறை இல்லாமல் வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.















Add Comment