52. கல்கத்தா மாநாடு
ஜவஹர்லால் நேரு, அத்தனை துடிப்புடன் செயல்பட்டதற்கு என்ன காரணம்? சைமன் கமிஷனுக்கு நாடெங்கும் ஏற்பட்ட கடுமையான எதிர்ப்பு, ஜவஹர்லால் நேருவுக்கு மக்கள் மனதில் எழுந்துள்ள சுதந்திர உணர்ச்சியை எடுத்துக் காட்டியது. அறிவுஜீவிகள் தொடங்கி, இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரும் ஆங்கிலேய அரசாங்கத்தின் மீது கடும் கோபம் கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே மாணவர்கள் ஒன்று திரண்டு கூட்டங்கள் நடத்தி, நாடு எதிர்கொள்ளும் அரசியல், பொருளாதாரப் பிரச்னைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்படவேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
கம்யூனிஸ்ட் கட்சியினர், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி, வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டார்கள். ஜம்ஷெட்பூரில் இரும்புத் தொழிற்சாலைகளில் வேலை நிறுத்தம் காரணமாக உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டது. கல்கத்தாவில் சணல் உற்பத்தி, ஷோலாப்பூரில் பருத்தி உற்பத்தி, கான்பூரின் கம்பளி உற்பத்தி என அனைத்தும் பாதிக்கப்பட்டன. பம்பாயில் மில் தொழிலாளர்கள் 60 ஆயிரம் பேர் சுமார் ஐந்து மாத காலம் வேலை நிறுத்தம் செய்ததால் ஏற்பட்ட பாதிப்பு கணிசமானது.
Add Comment