74. ஏழே நாட்களில் சுதந்திரம்
கல்கத்தா சென்ற நேரு அங்கிருந்து சாந்தினிகேதன் சென்று ரவீந்திரநாத் தாகூரைச் சந்தித்தார். அவர்களின் சந்திப்பின்போது, பூனாவில் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருக்கும் இந்திரா, மெட்ரிகுலேஷன் படிப்பை முடித்தவுடன், சாந்தினிகேதனில் மேற்கொண்டு படிப்பது என்று முடிவு செய்தார்கள்.
நேரு அலகாபாத் திரும்பியதும் 1934 பிப்ரவரி 12-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். கல்கத்தாவில் ஆல்பர்ட் ஹாலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகளில் ஆங்கிலேய அரசாங்கத்தின் அடக்குமுறைச் சட்டங்கள், நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு எதிராக அவர் பேசியதுதான் இந்த முறை கைதுக்கு வழி வகுத்தது. கைதான நேரு கல்கத்தா அழைத்துச் செல்லப்பட்டார்.
நேருவின் கைது பற்றி தெரிந்ததும், “நீ விடுதலையாகி ஐந்து மாதம்தானே ஆகிறது? அதற்குள் மறுபடியும் ஜெயிலுக்கா?” என்று ஸ்வரூப ராணி உடைந்துபோனார். கமலா நேருவுக்கும் அதே மனநிலைதான். கணவர் சிறையில், மகள் பூனாவில். மனத்தளவில் மிகவும் பலவீனமாகிப் போன கமலா நேருவுக்கு நோயின் தாக்கம் அதிகமானது. “மீண்டும் பழைய வீட்டுக்குப் போகிறேன்” என்று தனது கைது பற்றி பூனாவில் இருந்த இந்திராவுக்கு தந்தி கொடுத்தார் நேரு.
Add Comment