4. கனவான்
பெரிய பங்களா, அதன் உள்ளே அலங்கார விளக்குகள், விலை உயர்ந்த திரைச் சீலைகள், சோபா செட்கள், நீச்சல் குளம், வண்ணப் பூஞ்செடிகளும் பழ மரங்களும் நிறைந்த தோட்டம், டென்னிஸ் கோர்ட், கம்பீரமான குதிரைகள், ராஜ குடும்பத்தினர் பயன்படுத்தும் சாரட் வண்டி, விலை உயர்ந்த அயல் நாட்டு கார்கள், கூப்பிட்ட குரலுக்குப் பணியாளர்கள் என ஆனந்த பவன் இல்லத்தில் செல்வச் செழிப்பான வாழ்க்கை நடத்தினார் மோதிலால் நேரு.பவுர்ணமி இரவுகளில், பங்களாவின் மொட்டை மாடியில் இருந்து பார்த்தால், நிலவு ஒளியில் சலசலத்து ஓடும் கங்கை நதி கொள்ளை அழகு. மோதிலால் நேருவைப் பற்றித் தெரியாதவர்கள் ஆனந்த பவனைக் கடக்கும்போது, “இது ஏதோ ராஜ வம்சம் வசிக்கும் பங்களா” என்று நினைத்துக் கொள்வது சகஜம்.
உயர் நீதிமன்றத்துக்கு மோதிலால் நேரு, குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் வந்தாலும் சரி, வெளிநாட்டு காரில் வந்து இறங்கும் போதும் சரி. சற்றுப் பொறாமையாகப் பார்க்கும் வக்கீல்களும் உண்டு; ஓர் இந்தியரின் மகத்தான வளர்ச்சி எனப் பெருமையாகப் பார்க்கும் வக்கீல்களும் உண்டு. உயர் நீதி மன்றத்தின் நீதிபதிகளே வியந்து பார்த்த ஆளுமை மோதிலால் நேரு.
தனிப்பட்ட முறையில் பார்த்தாலும் வசீகரிக்கும் ஆளுமை, வசதியான வாழ்க்கை, ஏராளமான வருமானம், சமூக அந்தஸ்து, அழகான, அன்பான மனைவி, புத்திசாலியான மகன், அழகான இரண்டு மகள்கள் என்று இறைவன் கொடுத்த வரமாக மோதிலால் நேரு ஏராளமான அம்சங்களைப் பெற்றிருந்தார்…
Liked