விருந்தாளிகள் வந்தால் சமையலில் வடை பாயசம் நிச்சயம் இருக்கும். பாயசம் போல சிரமமில்லாமல் செய்யக்கூடிய இனிப்பு பிறிதொன்றில்லை. சிலர் கேசரி கிளறிப் போடுவர். அதற்கும் மேலே போய் எதற்கு வம்பு என்று கடையில் வாங்கி சபையில் வைத்து விடுவோரும் உண்டு.
ஆனால் ஒருமுறை அத்தாட்டி வீட்டிற்குப் போனபோது பால் கொழுக்கட்டை பண்ணிக் கொடுத்தார். பருப்புப் பாயசத்தில் நிறைய முந்திரிப் பருப்பு போட்டிருக்கிறார் என்றுதான் முதலில் நினைத்தேன். ஏலக்காயின் மணம், செம்புலம் கலந்த நீர் போல வெல்லம் சேர்ந்த தேங்காய்ப் பாலின் தித்திப்பு, அந்த இனிப்புக் கூழில் ஊறி மெதுக்கென்று பல்லில் கடிபடும் அரிசிக் கொழுக்கட்டையின் ருசி எல்லாம் சேர்ந்து அந்தச் சின்னக் கிண்ணத்தில் வேறு ஒரு தேவ பதார்த்தம் இருப்பது, ஒரு ஸ்பூன் சாப்பிட்டபின் தான் புரிந்தது.
அத்தாட்டி சமையற்கலையில் மீனாட்சி அம்மாளின் வாரிசு. பாரம்பரிய பதார்த்தங்களைத் தேடித்தேடிக் கண்டடைவதில் உவேசாவின் உறவுமுறை. போன வருடம் காரைக்குடிக்கு ஒரு விசேஷத்திற்குப் போனபோது இந்தப் பால் கொழுக்கட்டையைக் கற்றுக்கொண்டு வந்ததாராம்.
Add Comment