43. பிரித்தாளல்
இன்றைய நிதிச் சந்தையில் நம்முடைய குறுகிய கால, இடைக்கால, நீண்ட கால நிதித் தேவைகளுக்கான முதலீடுகளைச் செய்வதற்குப் பலவிதமான வழிகள், வாய்ப்புகள் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றிலும் வெவ்வேறு நன்மைகள், தீமைகள் உண்டு. அதனால், சில வழிகள் சில குறிப்பிட்ட கால முதலீடுகளுக்குமட்டும்தான் பொருந்தும். வேறு சில வழிகள் ஒன்றுக்கு மேற்பட்ட கால முதலீடுகளுக்கும் பொருந்தலாம்.
எடுத்துக்காட்டாக, நாம் வங்கிகளில், அஞ்சல் அலுவலகங்களில் அல்லது மொபைல் செயலிகளில் சேமிப்புக் கணக்குகளைத் தொடங்கலாம். இவற்றில் நாம் எப்போது வேண்டுமானாலும் பணத்தைப் போடலாம், எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். இருபத்து நான்கு மணிநேரமும் திறந்திருக்கிற ATM எந்திரங்களில் ஒரு மின்னணு அட்டையைச் சொருகி ரகசிய எண்ணைத் தட்டினால் நமக்கு வேண்டிய பணம் சட்டென்று கிடைத்துவிடும்.
அதனால், இந்தக் கணக்கில் நாம் நம்முடைய உடனடித் தேவைகள், குறுகிய காலத் தேவைகளுக்கான பணத்தைப் போட்டுவைக்கலாம், வேண்டியபோது எடுத்துக்கொள்ளலாம்.
ஒருவேளை, அந்தப் பணம் நமக்கு உடனடியாகத் தேவைப்படாது, சில ஆண்டுகளுக்குப்பிறகுதான் தேவைப்படும் என்றால், அப்போது அந்தத் தொகையைச் சேமிப்புக் கணக்கில் விட்டுவைப்பது சரியில்லை. ஏனெனில், அதற்குத் தரப்படும் வட்டி மிகவும் குறைவு.
Add Comment