27. தள்ளுபடித் தந்திரங்கள்
இப்போதெல்லாம் தீபாவளி, பொங்கல், நவராத்திரி, விடுதலை நாள், குடியரசு நாள் என்று எந்த விழாவானாலும் இணையத் தளங்களும் செல்ஃபோன் செயலிகளும் புகழ் பெற்ற கடைகளும் சிறப்பு விற்பனை அறிவித்துவிடுகிறார்கள். செய்தித்தாள், தொலைக்காட்சி, வானொலி, இணையம் என்று எதைத் திறந்தாலும் இந்த விற்பனை விழாக்களின் விளம்பரங்கள்தான். அநேகமாக எல்லாப் பொருட்களுக்கும் 50%, 60% என்று தொடங்கி 90% வரைகூடத் தள்ளுபடியை அள்ளி வீசுகிறார்கள். மக்களும் ‘நான் இதை வாங்கிட்டேன், நீ என்ன வாங்கினே?’ என்று பரபரப்போடு பேசிக்கொள்வதன் மூலம் இவர்களுக்குக் கூடுதல் விளம்பரம் செய்கிறார்கள்.
என் நண்பர் ஒருவர் இந்தச் சிறப்பு விற்பனைகளின் போதெல்லாம் ஒரு நகைச்சுவையைத் துணுக்கைத் திரும்பத் திரும்பச் சொல்வார், ‘நீ இதுமாதிரி தள்ளுபடி விற்பனையைப் பயன்படுத்திக்கிட்டா 50% பணம் மிச்சம்ங்கறது உண்மைதான். ஆனா, நீ அதைப் பயன்படுத்திக்காட்டி 100% பணம் மிச்சம்.’
இவர் சொல்வது உண்மையா? இந்தத் தள்ளுபடி விற்பனைகள் எல்லாம் மோசமானவையா? நாம் அவற்றைப் பயன்படுத்திக்கொள்வது தவறா?
தொலைக்காட்சிப் பெட்டி வாங்க விரும்பும் ஒருவர் அதற்கென்று முப்பதாயிரம் ரூபாயை ஒதுக்கிவைத்திருக்கிறார். அப்போது ஒரு சிறப்பு விற்பனை நாள் வருகிறது. அதில் அவர் தேர்ந்தெடுத்த அதே தொலைக்காட்சிப் பெட்டி 40% தள்ளுபடியில் கிடைக்கிறது. அதாவது, முப்பதாயிரம் ரூபாய்த் தொலைக்காட்சியைப் பதினெட்டாயிரம் ரூபாய்க்கு வாங்கிவிடுகிறார். இதில் அவருக்குப் பன்னிரண்டாயிரம் ரூபாய் மிச்சமாகிறது.
Add Comment