ஒவ்வோராண்டும் நாம் என்ன செய்தோம் என நினைத்துப் பார்க்கும் பழக்கம் பல ஆண்டுகளாக என்னிடம் இருக்கிறது. என்றாலும் மெட்ராஸ் பேப்பரில் எழுதத் தொடங்கியபிறகு அதனை ஆவணப்படுத்தும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த ஆண்டை திரும்பிப் பார்ப்பது மட்டுமல்ல அடுத்த ஆண்டை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற யோசனையும் உடன் ஒட்டிக்கொள்கிறது.
சென்னைக்குக் குடிபெயர்ந்து பதினைந்து வருடங்களாகின்றன. ஆயிரம் முறை சென்னை ஐ.ஐ.டி. கல்லூரியைக் கடந்து சென்றிருப்பேன். ஒவ்வொரு முறை கடந்து செல்லும்போதெல்லாம் ஏன் இந்தக் கல்லூரியில் நாம் படிக்கவில்லை என்ற எண்ணத்துக்கு மாற்றாக ஏன் இப்படி ஒரு கல்லூரி இருப்பது பள்ளியில் படிக்கும்போதே நம் கவனத்துக்கு வரவில்லை என்ற எண்ணம் தான் தோன்றியது. இந்த வருடம் சென்னை ஐ.ஐ.டி கல்லூரியில் சில நாள்கள் தங்கிப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எங்கள் நிறுவனமும் ஐ.ஐ.டி. கல்லூரியும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பயிற்சி வகுப்புகள் பயனுள்ளதாக இருந்தன. படிக்கும் சூழல் மட்டும் சரியாக இருந்தால் எல்லா மாற்றங்களும் சாத்தியம்தான் என்பதற்கு இந்தக் கல்லூரியே சாட்சி. இந்தக் கல்லூரியைவிடப் பல மடங்கு கட்டணம் வாங்கும் பிற கல்லூரிகள் இதனை ஏன் யோசிப்பதேயில்லை என்பது தெரியவில்லை. மாநில உயர்கல்வி அமைச்சருக்கு ஆளுநருடனான அரசியலைச் சமாளிப்பதிலேயே நேரம் கடந்துவிடுகிறதுபோல.
கணக்கற்ற நண்பர்களைக் கொடுத்திருக்கும் சென்னை நகரத்தைவிட்டு இந்த ஆண்டு ஒரே ஒரு நாள் கூட குடும்பத்தோடு பயணம் போனதில்லை என்பதை நினைத்துப் பார்க்கிறேன். சகோதரரின் குடும்பமும் சென்னைக்கு இடம்பெயர்ந்துவிட்டதால் போக்கிடமில்லை என்பது ஒரு காரணம். குடும்ப சுற்றுலா செல்லும் பழக்கமுமில்லை. அடுத்த வருடமாவது இதற்கு ஆவண செய்ய வேண்டும் என்ற குழந்தைகளின் கோரிக்கையை அடுத்த ஆண்டு செயல்படுத்தியாக வேண்டும்.
Add Comment