மோட்டார் படகுகளும் திசைகாட்டும் கருவிகளும் தொலைத்தொடர்பு வசதிகளும் இல்லாத தூத்துக்குடி – இலங்கைக் கடல் வழி. பாய்மரக் கப்பல்கள், தோணிகள், கட்டுமரங்கள் மூலம் வியாபாரம், மீன் பிடித்தல் எனக் கடலுக்குச் செல்லும் மீனவர்கள், வியாபாரிகள். இவர்களின் ஒரே வழித்துணை மற்றும் நம்பிக்கை தூத்துக்குடியின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான ’பனிமயமாதா’ எனப்படும் ‘திவ்விய சந்தமரிய தஸ்நேவிஸ் மாதா’ பேராலயம்தான்.
கடலுக்குள் செல்லும் முன் மீனவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து ஒரு மெழுகுவர்த்தி ஏற்றி, “எங்களை நல்லபடியாகத் திரும்பக் கொண்டு வந்து சேர்த்து விடு அம்மா” என்று வழிபட்டுவிட்டு பயணத்தைத் துவங்குகிறார்கள். திரும்பி வந்ததும் நன்றி தெரிவித்து விட்டுச் செல்வார்கள். அவர்கள் சென்று திரும்பும் வரை அவர்கள் குடும்பத்திற்கும் மாதாதான் பாதுகாப்பு என்று அவர்கள் நம்பினர். இடி தாங்கி அன்னை, இரக்கத்தின் அன்னை, தூய பனிமயமாதா, பெரிய கோயில், மறை மாவட்டத்தின் தலைக்கோயில் எனப் பல பெயர்களில் இந்தக் கோயிலையும் மாதாவையும் அழைக்கிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்துவர்கள் வசித்து வருகிறார்கள். பேராலயத்தைப் பொறுத்தவரை இது அனைத்து மதத்திற்கும் பொதுவான ஒரு மத நல்லிணக்க ஆலயமாகத் திகழ்கிறது. இந்துக்கள், இஸ்லாமியர்கள் கிறித்தவர்கள் என அனைத்து மதத்தினரும் எந்தவிதமான மதப் பாகுபாடின்றி வழிபடும் காட்சியை இங்கே காணலாம்.
கிறிஸ்துமஸைவிட முக்கியமான ஒரு வழிபாடாக இப்பகுதிக் கிறிஸ்துவர்கள் நினைக்கும் ஒரு விழா இந்தப் பனிமயமாதா (Our Lady of Snow) திருவிழா. இந்தப் பேராலயத்தின் 441-ஆவது ஆண்டுத் திருவிழாவும் 16-ஆவது தேர்த்திருவிழாவும் கொடியேற்றத்துடன் 24 ஜூலை அன்று துவங்கியது. இந்த ஆண்டு தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழாவானதால் அதை முன்னிட்டு 16-வது முறையாகத் தங்கத்தேர்ப் பவனி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
Add Comment