ஆறுமாதக் குழந்தையின் பிஞ்சு உள்ளங்கையைப் போல மென்மையானது அந்த வெள்ளை உருண்டை. ஓர் உழைப்பாளியின் பதினைந்து நிமிடத்தை மைதா மாவில் குவித்த பின் கிடைப்பது. இதற்குப்பின் ஒரு கலைஞரின் கைப்பட்டு இது பரோட்டாவாக மாறுவது ஒரு கண்கட்டி வித்தை.
அந்த மென்மையைக் கையாள, எண்ணெய்யில் தனது கைகளை நனைத்துக் கொள்வார். உருண்டையைக் கல்லில் தேய்த்து வட்டமாக்கி, ஒரு பக்கத்தை இரு கைகளாலும் பிடித்துக்கொண்டு துணி துவைக்கும் கல்லில் ஓங்கி அடிப்பதுபோல அடிப்பார். அதேசமயம் மடிப்புக் கலையாமல் புதுப்புடவையை விரித்துக் காட்டுவது போலக் கிழியாமலும் பார்த்துக் கொள்வார். அடி தாங்காத அந்த மென் உருண்டை கிழியும் தறுவாயில், துவைத்தது போதும் எனச் சுருட்டி வைத்துவிடுவார். இப்படிச் செய்தால் உருண்டை ரோஜாப் பூவைப்போலச் சுருண்டு வரும். ஓங்கி அடிக்காமல் கத்தியால் கிழித்துச் சுருட்டினால் சர்தார்ஜியின் கொண்டையைப் போலாகிவிடும்.
இதை மீண்டும் கைகளால் வட்டமாக்கி அடுப்பில் சுட்டு எடுத்தால், ரகசியங்களைத் தனக்குள் அடக்கி வைத்திருக்கும் அடுக்கடுக்கான பரோட்டா தயார். ஒவ்வொரு அடுக்காக இதைப் பிரித்து வாயில் போட்டு அப்படியே சாப்பிட விரும்புகிறார்கள் ஜென் ஆல்ஃபா குழந்தைகள். டீசென்ட்டாக இதோடு மசாலா குருமா அல்லது கறிக்குழம்புத் தொட்டுச் சாப்பிட விரும்புகிறார்கள் ஜென் ஸீ இளைஞர்கள்.















Add Comment