சென்னை துறைமுகத்துக்குச் சமீபத்தில் ஒரு கப்பல் வந்தது. துறைமுகமென்றால் கப்பல் வராமல் கட்டை வண்டியா வரும்? இதெல்லாம் ஒரு விஷயமா என்றால், வந்தது எந்தக் கப்பல், அதன் நோக்கம் என்ன என்பதில் உள்ளது விஷயம்.
அந்தக் கப்பலின் பெயர், பிளாஸ்டிக் ஒடிசி. உலகம் சுற்றும் கப்பல். ஆனால் சும்மா சுற்றும் கப்பல் அல்ல. ஓர் உயர்ந்த நோக்கத்தோடு சுற்றும் கப்பல்.
இதற்கு முன்னர நாம் கூப்பிடாமல், அங்கிருந்து தானாக வந்த கப்பல் என்றால், அது எம்டன்தான். ஆனால் நோக்கம் கெட்டது. முதலாம் உலகப் போரின் போது மைய சக்திகளின் தாக்குதலுக்கு உள்ளானது இந்தியாவில் சென்னை (அப்போதைய மதராஸ்) நகரம் மட்டுமே. எம்டன் என்ற போர்க் கப்பல், கேப்டன் கார்ல் வான் மல்லர் தலைமையில் செப்டம்பர் 22, 1914 அன்று இரவு மதராஸ் துறைமுகப் பகுதிக்கு இரவு 09:30 மணிக்கு வந்தது. கடற்கரையிலிருந்து சில ஆயிரம் அடி தூரத்தில் நின்று கொண்டு, குண்டுகளைப் பொழிந்தது (மொத்தம் 125 குண்டுகள்) எம்டன். பர்மா எண்ணெய்க் கம்பனிக்குச் சொந்தமான எண்ணெய்த் தாங்கிகள் மற்றும் சிறிய சரக்குக் கப்பல் ஒன்றையும் தாக்கிச் சேதப்படுத்திவிட்டுப் போனது. ஒரு சில நிமிடங்கள் மட்டுமே நீடித்த இத்தாக்குதலால் அப்போதைய மதராஸ் நகரமே கதிகலங்கிப்போனது.
Add Comment