எண்பதுகளில் தமிழ்நாட்டு மக்கள் பலரும் காலை எழுந்தவுடன் கேட்டது வானொலியில் ஒலிபரப்பான தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களின் “இன்று ஒரு தகவல்” நிகழ்ச்சியை. ஒரு குட்டிக் கதையோடு ஆரம்பித்து ஐந்து நிமிடங்களில் வாழ்க்கைத் தத்துவங்களை அவருடைய பாமர உச்சரிப்பில் கேட்கும் சுகமே அலாதியானது. இருபது ஆண்டுகள் கழித்து தொழில்நுட்பம் வளர இதே நிகழ்ச்சி சன் தொலைக்காட்சியில் வந்த போதும் அதேயளவு வரவேற்பைப் பெற்றது.
இதைப் போன்ற நிகழ்ச்சிகளை இன்றைக்கு இளைஞர்கள் முன்பைவிட அதிகமான நேரம் கேட்கிறார்கள். சென்னை மெட்ரோவாகட்டும், பேருந்துப் பயணமாகட்டும் எல்லோரும் இயர்போனை மாட்டிக் கொண்டு எதையாவது கேட்ட வண்ணம் இருக்கிறார்கள். கையில் இருக்கும் செல்பேசியில் அவர்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சிகளைக் கேட்கிறார்கள். இப்படி இவர்கள் கேட்கும் இணைய ஒலிபரப்புகளுக்கு பாட்காஸ்ட் (Podcast) என்று ஆங்கிலத்தில் பெயர். இதன் தொடக்கத்தையும், பாட்காஸ்ட்களைக் கேட்கப் பிரபலமாக இருக்கும் செயலியைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
இன்றைக்கு ஆப்பிள் நிறுவனம் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது ஐபோன். ஆனால் அதன் முன்னோடியாக, 2002இல் வெளிவந்து உலகளவில் மிகப் பெரிய வெற்றி பெற்றது ஐபாட் (iPod) மற்றும் அதோடு வந்த கணினிகளுக்கான ஐட்யுன்ஸ் செயலியும்.
Add Comment