10 – போர்க்களத்தில் புத்தாண்டு
01-01-2000, தஜிகிஸ்தான்
தொலைக்காட்சியில் புத்தாண்டு உரையை முடித்த கையோடு செச்சனியாவுக்குக் கிளம்பினார் அதிபர் புதின். நெருங்கிய ஆலோசகர் நிக்கலாய் பாத்ருச்சேவ்வும் இணைந்து கொண்டார். பிரதமராகிவிட்ட பிறகு, உளவுத்துறையான FSBஐ (முன்னாள் KGB) இவரிடம் ஒப்படைத்திருந்தார் புதின். மனைவிகளோடு இருவரும் புத்தாண்டைக் கொண்டாட ஹெலிகாப்டரில் ஏறினார்கள். குதெர்மிஸ் என்ற செச்சனியாவின் இடைக்காலத் தலைநகரில் தரையிறங்குவது திட்டம். ஆனால் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக தகிஸ்தானின் தலைநகர். மக்கச்காலாவில் பத்திரமாகத் தரையிறங்கினார்கள். செச்சனியத் தீவிரவாதிகளை விட இந்தப் பனிமூட்டம் ஒன்றும் ஆபத்தில்லைதான்.
செச்சனியாவைப் போலவே அதன் அருகிலிருக்கும் தகிஸ்தானும் ரஷ்யக் குடியரசு நாடுகளில் ஒன்று. தரையிறங்கத் தாமதமானதால் கைவசமிருந்த ஷாம்பெயின் பாட்டில்களுடன் ஹெலிகாப்டரிலேயே புத்தாண்டுக் கொண்டாட்டம் தொடங்கியது. பிறகு அங்கிருந்து தரைவழியாக நூறு கிமீ பயணம் செய்து, திட்டமிட்டபடி அதிகாலை ஐந்து மணிக்கு குதெர்மிஸை அடைந்தார்கள். பனிமூட்டமோ ஹெலிகாப்டரோ புதினின் திட்டத்தை மாற்றிவிட முடியாது. அங்கு செச்சனியத் தீவிரவாதிகளை எதிர்த்துக் களத்தில் சண்டையிட்டு வந்த ரஷ்ய ராணுவத்தினருடன் புத்தாண்டுக் கொண்டாட்டம் தொடர்ந்தது.
‘உங்கள் வீரத்தை ரஷ்யா மிகவும் பாராட்டுகிறது. இது நாட்டின் கௌரவத்தையும் கண்ணியத்தையும் மீட்டெடுக்கும் முயற்சி மட்டுமல்ல, ரஷ்யப் பேரரசைப் பிரிக்க நினைக்கும் சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முக்கியமான நிகழ்வு’ என்று உரையாற்றினார் புதின். ஒவ்வொரு வீரருக்கும் கைகொடுத்து, புத்தாண்டுப் பரிசாக ஒரு வேட்டைக் கத்தியை அளித்தார். பிறர் உதவியை எதிர்பாராமல் தன்னைத் தானே காத்துக்கொள்ளும் வீரர்களுக்கு ரஷ்யக் கலாசாரத்தில் இது கௌரவப் பரிசாக அளிக்கப்படும் வழக்கமுண்டு. புத்தாண்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வந்த ரஷ்யத் தொலைக்காட்சி, புதினின் இந்தச் செயலை அவசர அவசரமாக நேரலையில் ஒளிபரப்பத் தொடங்கியது.















Add Comment