நினைத்ததை முடிப்பவன்
1997
க்ரெம்ளின் அரண்மனை,
மாஸ்கோ, ரஷ்யா.
க்ரெம்ளின் அரண்மனையில் அரசு அதிகாரியாகப் பணிபுரிந்து கொண்டிருந்தார் விளாதிமிர் புதின். ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. பேசியது அவரது அரசியல் குருவும், கல்லூரி ஆசிரியருமான அனதோலி சப்ஜக்கின் மனைவி. லெனின்கிராட் நகரின் முன்னாள் மேயராக இருந்தவர் சப்ஜக். சோவியத்தின் பிரிவுக்குப் பிறகு அந்நகரம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் என்று பெயர் மாற்றப்பட்டது. இவருக்குத் துணை மேயராக இருந்தவர் புதின். அடுத்த தேர்தலில் தோற்ற சப்ஜக் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் குவிந்தன. கைது செய்யப்பட்டவருக்கு மனைவியிடம் பேச மட்டும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதற்குப் பிறகுதான் அவரது மனைவி புதினைத் தொலைபேசியில் அழைத்தார்.
புதின் துணைப் பிரதமரைத் தொடர்பு கொண்டார். அதிபர் எல்ஸினுடன் உரையாடிக் கொண்டிருந்த அவர், செய்தியை எல்ஸினுக்குத் தெரியப்படுத்தினார். அன்றைய சோவியத்தில் யாரும் செய்யாத தவறை சப்ஜக் செய்துவிடவில்லை. வழக்குகளை எல்லாம் தாங்குமளவு அவரது உடல்நிலை ஒத்துழைக்காது என்று எல்ஸினிடம் தெரிவிக்கப்பட்டது. சப்ஜக்கைத் தொட வேண்டாம் என்றார் எல்ஸின். அவரது சொல்லுக்கேற்ப சப்ஜக் பல வாரங்கள் மருத்துவமனைக் காவலில் வைக்கப்பட்டார். இனியும் சிறைக்குக் கொண்டு செல்லாமல் இருக்க முடியாது. அந்த நீண்ட அரசு வார விடுமுறைக்குப் பிறகு அவரைச் சிறைக்கு மாற்றுவது என முடிவு செய்யப்பட்டது. புதினுக்கும் இது தெரிய வந்தது.














Add Comment