2024ஆம் ஆண்டறிக்கையைப் புத்தக வாசிப்பிலிருந்து தொடங்குவோம். இந்த ஆண்டு நான் வாசித்தது குறைவு. ஆனாலும் மனக்குறை இல்லை. காரணம், படித்ததில் பெரும்பாலானவை க்ளாஸிக் வகைப் புத்தகங்கள். காகங்கள் (சிறுகதைகள் 1950-2000, சுந்தர ராமசாமி. அசோகமித்திரன் சிறுகதைகள் (தொகுதி 1), ஒரு யோகியின் சரிதம், தமிழ் அறிவோம் 1, 2 மடேசுவரன் போன்றவை முக்கியமான புத்தகங்கள். பல்ப் வகைப் புத்தகங்கள் சில வாசித்தேன். குறிப்புகளுக்காக ஐந்தாறு புத்தகம் கொள்ளளவுக்கு வாசித்திருப்பேன்.
இவ்வாண்டு மெட்ராஸ் பேப்பர் வார இதழில் இந்த ஆண்டறிக்கையைச் சேர்த்து நாற்பத்தைந்து கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். அவற்றில் பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் ஆயிரத்து நாநூறு வார்த்தைகளில் எழுதியிருக்கிறேன்.
புனைவுகளில் நான்கு சிறுகதைகள். அவற்றில் ஒன்று கானல் அமீரகம் சிறுகதைப் போட்டியில் கடைசி இருபத்தைந்து குறும் பட்டியல் வரை சென்றது. பரிசுக்குத் தேர்வாகவில்லை. அதில் வருத்தமில்லை. ஒரு போட்டியில் அதுவரை சென்றது மகிழ்ச்சி. இன்னொரு சிறுகதை தினமலர் – வாரமலர் சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றிருக்கிறது. மூன்றாவது சிறுகதையை மாலைமலர் சிறுகதைப் போட்டிக்கு அனுப்பியிருக்கிறேன். 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முடிவு வெளியாகும்.
Add Comment