இருநூற்றுப் பதினாறு அடி உயரக் கோபுரம். அந்தக் கோபுரத்திலிருந்து இரும்புச் சங்கிலி ஒன்று பத்தடி கீழே தொங்குகிறது. ஒரு கட்டத்திற்கு மேல் அந்தக் கோபுரத்தின் மீதேற இதுவே படி. உடல் முழுதும் சுற்றப்பட்ட கொடிகள். வயிற்றிலிருந்து பதினைந்து அடி நீளத்திற்கு துணிக்கயிற்றில் தொங்கவிடப்பட்ட ஒரு மூட்டை. அதிலும் கொடிகள். நான்கு நபர்கள். இதற்கான முன் தயாரிப்புகளில் அரைமணிநேரம் ஈடுபடுகிறார்கள். அவர்களைச் சுற்றி பெரிய கூட்டம். கோவிலின் பிரகாரத்தை நிறைத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருக்கிறார்கள். மேலே இருப்பவர்கள் எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்வதில்லை. அந்தக் கோபுரத்தின் அடுக்குகள்தான் படிகள். கீழே இருப்பவர்களுக்கு முதுகைக் காட்டி ஏறுவதில்லை. அவர்களைப் பார்த்துக் கொண்டே இரண்டு கைகளால் உந்துகிறார்கள். ஒவ்வொரு அடுக்காகக் கால்கள் ஏறுகின்றன.
வயிற்றில் கட்டப்பட்ட அந்த மூட்டை ஊசலாடுகிறது. என்ன கனமென்று பார்ப்பவர்களால் உணர முடியவில்லை. அபாயகரமான உயரத்திலிருந்து கைகளை அசைக்கிறார்கள். ஜெய் ஜெகந்நாத் என்று முழங்குகிறார்கள். அவர்களது குரல்கள் கீழே வருவதில்லை. அல்லது பார்ப்பவர்களுக்குக் கேட்பதில்லை. பக்தர்கள் கூட்டம் ஆரவாரமாகப் புல்லரிப்போடு கையசைக்கிறது. ஆயிரக்கணக்கான தலைகளும் மேல்நோக்கி. அந்த மனிதர்களை நோக்கி. அந்தக் கொடியேற்றத்தைக் காணக் கழுத்து வலிக்கப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஜெய் ஜெய் ஜெகந்நாத் என்று மறுமொழியாகக் கூவுகிறது பக்தர்கள் கூட்டம். மனத்துக்குள் ஒரு பதைபதைப்பு. இருந்தாலும் ஒருவிதமான பரவசம் அந்தப் பகுதியில் சூழ்கிறது.
இது பூரி ஜெகந்நாதர் கோவிலில் தினசரி மாலை நிகழும் ஒரு நிகழ்வு. அந்தக் கொடியேற்றம் எந்நாளும் தடைப்படுவதில்லை. வெயில், மழை, காற்று, பனியென எதுவாக இருந்தாலும் மாலை ஐந்து மணியிலிருந்து ஆறுமணிக்குள். இந்த வைபவம் நடந்தே தீரும். இந்தக் கொடியேற்றத்தைக் காண மக்கள் அந்த நேரம் கோவிலில் திரண்டுவிடுவது வழக்கம். ஜெகந்நாதர் தரிசனத்தை விட அந்த நேரம் இதற்கு மட்டுமே முக்கியத்துவம். இது மட்டுமல்ல மாற்றப்பட்ட கொடிகளைக் கீழே கொண்டு வந்து பக்தர்களிடம் கொடுத்து விடுகிறார்கள். அதற்குக் காணிக்கையாக ஐம்பது, நூறு என்று சக்திக்கு ஏற்றவாறு மக்கள் கொடுக்கிறார்கள் . வீட்டு வாசலில் கட்டலாம், கல்லாப்பெட்டியில் வைக்கலாம். பூஜையறையில் வைத்துப் பூஜிக்கலாமெனப் பல உபயோகங்கள் இந்தப் பழைய கொடிகளுக்கு. இந்தக் கொடியேற்றும் உரிமை குறிப்பிட்ட குடும்பங்களுக்கு மட்டுமே உண்டு. பரம்பரையாக அவர்கள் மட்டுமே இதில் ஈடுபடுகிறார்கள்.















Add Comment