இருநூறு ரூபாய் விலைக் குறைப்பு – இந்திய சமையல் எரிவாயுவிற்கு. அடுத்து பெட்ரோல் என்ற ஆசையிருந்தால், மனத்தைத் தேற்றிக் கொள்ளுங்கள். இப்போதைக்கு வாய்ப்பில்லை இந்தியர்களே! உக்ரைன் – ரஷ்யப் போரின் புண்ணியத்தில், நமக்கு விலையேறாமல் இருந்ததே பாக்கியம். ஐரோப்பிய நாடுகளின் திண்டாட்டத்தைப் பார்த்தோமல்லவா? நமக்குக் கச்சா எண்ணெய் அனுப்பும் ரஷ்யாவிலேயே இப்போது பெட்ரோல் தட்டுப்பாடு!
அறுவடை நேரத்தில் ஏற்பட்டிருக்கிறது இந்தத் தட்டுப்பாடு. எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையங்களுக்குக் கிடைத்த அரசாங்க மானியங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் ரஷ்யாவின் தென்மேற்குப் பிராந்தியங்களில் பெட்ரோல், டீசல் விற்பனை கடுமையாகப் பாதிப்படைந்திருக்கிறது. இந்த எரிவாயு நெருக்கடியின் காரணங்கள் தற்காலிகமானதுதான் என்கிறார்கள். எண்ணெய் ஆலைகள் பழுதுபார்க்கப்படுதல்; எண்ணெய்த் தளவாடங்கள் ஒழுங்குமுறை போன்றவை அக்டோபர் மாதத்திற்குள் சீரடைந்துவிடும் என்கிறார்கள்.
Add Comment