19 வடக்கும் தெற்கும்
‘கன்யாகுமரி – மார்த்தாண்டம் – திருவனந்தபுரம். இந்த இரண்டு நாட்களைவிட திருவனந்தபுரத்திலிருந்து கொய்லோன் இன்னும் அதிகத் தூரம். படுங்கள்’ என்று, அத்துல் சர்மா அதட்டாத குறையாக அரட்டையடித்துச் சிரித்துக்கொண்டிருந்த பையன்களிடம் மராத்தியில் சொல்லிக்கொண்டிருந்ததைக் கேட்டதும் அடுத்துக் கொல்லம் என்றுதானே மலையாளிகள் பேசிகொண்டிருந்ததைக் கேட்டோம். இவன் என்ன, எக்ஸ்பிரஸ் ரயிலின் பெயர்போல கொய்லோன் என்கிறான் என்று அந்தப் பக்கமாகப் போன மலையாளிகள் இருவரில் தன் உயரத்தில் இருந்த தாடிக்காரனை நிறுத்தி,
‘நீ கேரளாவா?’ என்றான்.
‘ஒ’ என்றான் அவன்.
‘நாளைக்குப் போகப்போவது கொல்லமா’ என்றான்.
அவன் திரும்ப ‘ஓ’என்றான்.
‘கொல்லத்திலிருந்து கொய்லோன் எவ்வளவு தூரம்’ என்று கேட்டான்.
சைகை பாஷை இருக்கையில் நமக்கெதற்கு இங்கிலீஷ் என்பதைப்போல அவன் – ஈரக்கை நீரை விளையாட்டாக அடுத்தவர் மேல் தெறிக்கவிடுவதைப்போல – வலக்கையின் அத்தனை விரல்களையும் கட்டைவிரலுக்குள் வைத்து ஒரே சமயத்தில் உதறி ‘எ ரெண்டும் சேமல்லே’ என்றான்.














Add Comment