39 எதிரி
அன்றைக்கும் நான்கு மணிக்கே லகுக ரங்கு ஏக்குஹேவைப் பாடி ஷா காக்கா எழுப்பிவிட்டிருந்தாலும் வெளிச்சம் வந்தபிறகுதான் தோனிலிருந்து கிளம்பிற்று பயணம். வழக்கம் போல எல்லோருடைய மூட்டை முடிச்சுகளும் லாரிகளில் ஏற்றப்பட்டுவிட்டாலும் ரேலி புறப்பட்டபாடில்லை. ஏன் இன்னும் புறப்படவில்லை என்பது எல்லோருக்குமே சற்று வியப்பாகத்தானிருந்தது. ஆளாளுக்கும் ஒரு காரணத்தைச் சொல்லிக்கொண்டார்கள்.
கடைசியில் பார்த்தால் அங்கிருந்து கர்னூல் 45, 50 கிலோ மீட்டர்கள்தான் என்பதால் ஊருக்கு முன்னால் புறப்பட்டுப் போய்ச் சேர்ந்துவிட்டால் ஜனங்கள் இன்னும் தெருவுக்கே வராத ஊரில் ஊர்வலம் போனால் யாருக்கும் தெரியாது; அதே சமயம் போய்ச் சேர்ந்தவர்களை ஓய்வெடுக்க விட்டுவிட்டு, எல்லோரும் சைக்கிளை எடுங்கள் ஊர்வலம் போகலாம் என்றால் சைக்கிள்காரகளுக்கு உற்சாகம் இருக்காது. அதைவிட, அத்தனை சைக்கிள்கள் ஊருக்குள் நுழைகிற போது மக்களிடையே உண்டாகிற வியப்பும் ஆர்வம் கலந்த உற்சாகமும் ஊருக்குள் சும்மா போகிற ஊர்வலத்தில் இல்லாமல் போய்விடும் என்பதால்தான் புறப்பாட்டில் தாமதம் என்பது பேச்சுவாக்கில் பின்னால் தெரியவந்தது.














Add Comment