27. தொப்புள் கொடி
முனி என்னைக் காட்டிலும் பிராயம் மிகுந்தவன். ஒரு தோராயக் கணக்கில்தான் சொல்கிறேன். எனக்கு முப்பது சம்வத்சரங்களுக்கு முன்னர் அவன் பிறந்திருக்க வேண்டும். ஆனால் தோற்றத்தில் இப்போதும் முப்பது பிராயத்து வாலிபனைப் போலத்தான் இருந்தான். அது பற்றி எனக்கு வியப்பெல்லாம் இல்லை. உடலத்தைப் புடமிடத் தெரிந்தவன் எந்தப் பிராயத்தையும் தோற்றத்தில் நிரந்தரமாக்கிக்கொள்ள முடியும். வானத்தில் திரை விரித்து அவன் எனக்குக் காட்டித் தந்த அதர்வன், அவனைக் காட்டிலும் முப்பத்து மூன்று பிராயங்கள் மூத்தவனென்று சொன்னான். ஆனால் அவனுமே கட்டுறுதி குலையாத வாலிபனைப் போலவே காணப்பட்டான்.
‘பொதுவாக உங்கள் குலத்தவர் உணவுக் கிறக்கம் மிகுந்தவர்களல்லவா?’ என்று நான் முனியிடம் கேட்டேன்.
‘ஆம் சாரனே. உட்கொள்ள ஒன்றுமில்லாவிட்டால்தான் மனித குலம் நசித்துப் போகும். உணவில் உப்பில்லை என்றாலே ஆரியர்கள் பிராயோபவேசம் செய்துவிடுவார்கள்’ என்று சொன்னான்.
‘கேள்விப்பட்டிருக்கிறேன் முனியே. சிந்து தீரம் கடந்து வரும்போது கால்நடைகளின்மீது மூட்டை மூட்டையாக உப்பைத்தான் ஏற்றி வந்தீர்களாமே?’
Add Comment