சென்னையில் மிக்ஜாம் புயல் மழை ஓய்ந்த கையோடு அடுத்த மழை ஆரம்பித்துவிட்டது. இது மனச் சேதங்களையெல்லாம் நேர்ப்படுத்தும் சாதக மழை, இசை மழை.
சபாக் கச்சேரிகளின் ஆரோஹண ஆலாபனைகளில் மனத்தை உவந்து கொடுக்க வருபவர்கள் முதல் வகை. செவியுணவோடு வயிற்றுக்கும் சிறிது ஈந்து கொள்பவர்கள் இரண்டாம் வகை. வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே வாய்க்கும் சபா கேண்டீனின் நானாவித பட்சண பலகாரங்களுக்காகப் படையெடுத்து வரும் சுவையுண்ணிகள் மூன்றாம் வகை. அப்படி என்ன செழிப்புச் சுவை இருக்கிறது அங்கே? இந்த வருடமாவது போய்ப் பார்த்துவிடுவது என முடிவெடுத்தேன்.
சபா கேண்டீன் என ஸர்ச் செய்தால் சோஷியல் மீடியாக்கள் முதலில் காட்டுவது மயிலாப்பூர் பாரதி வித்யா மண்டபத்தின் தங்கத்தாம்பாளம் மெனுவைத்தான். எண்ணெய்க் கத்திரிக்காய், வெண்டை மோர்க்குழம்பு, புளி இஞ்சி, குடைமிளகாய்ப் பச்சடி, கேரட் பாயசம் என தினம் தினம் வகைவகையாய் கல்யாண விருந்து படைக்கின்றனர் ‘அறுசுவை அரசு’ கேட்டரர்ஸ். சோட்டா இன்ஃப்ளூயன்ஸர்களில் ஆரம்பித்து சின்னத்திரை பிரபலங்கள் வரை பலரும் போய்ச் சாப்பிட்டு ரீல்ஸ் போடுகின்றனர். வெள்ளைச் சாதத்தில் பருப்பு நெய்யைக் கொட்டிப் பிசைவது, அதன் மேல் அப்பளத்தை வைத்து நொறுக்குவது, பாயசத்தை உறிஞ்சுவது, நுரைபெருக ஃபில்டர் காப்பியை ஆற்றுவது, கடைசியில் பீடாவையும் விட்டுவைக்காமல் வாய்க்குள் அதக்கி, ஒரு கண்ணை மூடி கட்டைவிரலையும் ஆள்காட்டி விரலையும் சேர்த்துப் பிடித்து மற்ற விரல்களை ஆட்டி ‘ஆஸம் ஆஸம்’ என ஆவலாதியைக் கிளப்பி விடுகின்றனர்.
Add Comment