குறைக்கடத்திகள் என்று சற்று கொச்சையாக மொழிபெயர்க்கப்பட்டு விட்டாலும் செமி கண்டக்டர்களின் (semi conductor) ஆகிருதி மிகமிகப் பெரியது. ஒரு நாளின் அத்தியாவசியக் காரியங்கள் ஒவ்வொன்றிலும் நம்மை அறியாமலேயே ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் பரப்பிரம்மம் அது.
அதுவன்றி நம் நாளை அசையவிடாத செல்ஃபோனில் தொடங்கி தொலைக்காட்சி, ரெஃப்ரிஜிரேட்டர் ஈடாக உள்ளுறையும் உயிரென செமிகண்டக்டர்கள் நம் வாழ்வோடு கலந்தவை. வீட்டில் மட்டுமல்ல, இன்றைய நுட்பச்சார்பு மிகுந்துவிட்ட உலகில் அனைத்து எலக்ட்ரானிக் சாதனங்களும் செமிகண்டர்களின் இதயமாக இயங்கும் மைக்ரோ சிப்களைப் பயன்படுத்தியே இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஒரு காரில் இருக்கும் இன்ஜின், ஹெட்லைட், டிரைவிங் அசிஸ்ட் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது, பாதுகாப்புக்குத் தேவையான ஏர்பேக், ஏபிஎஸ் போன்ற பாதுகாப்பு வசதிகளைச் செயல்படுத்துவது என காரின் வெளிப்பக்கத்திலும் சரி உட்புறத்திலும் சரி பல்வேறு பகுதிகளில் மைக்ரோ சிப்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதால் ஆட்டோமொபைல் துறையும் அதுவன்றி இயங்காத துறையாக இருக்கிறது.
ஸ்மார்ட் போன், டிவி, லேப்டாப் தொடங்கி மிகப்பெரிய தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் பிரமாண்ட இயந்திரங்கள் வரை எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அதன் உருவத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இல்லாத இந்த மிகச் சிறிய சில்லு இதயங்களில்தான் அவை இயங்கத் தேவையான கட்டளைகள் பதிந்து வைக்கப்படுகின்றன.
Add Comment