கடந்த வாரம் முழுதும் ஊடகங்களை ஆக்கிரமித்தவர், மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. துறையின் பெயர்தான் மதுவிலக்கே தவிர, டாஸ்மாக் நிர்வாகம்தான் அவருக்கு முக்கியப் பணி. டாஸ்மாக் கடைகளில் ஒவ்வொரு பாட்டிலுக்கும் பத்து ரூபாய் அதிகம் வைத்து விற்பனை செய்யப்படுவது ஊரறிந்த உண்மை. அதைச் சுட்டி, அவரைப் பத்து ரூபாய் பாலாஜி என்று எதிர்க்கட்சியினர் ஏளனம் செய்வதும் நாடறிந்த செய்தி. இவையெல்லாம் ஒரு புறமிருக்க, இன்றைக்கு செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதற்கு இந்த ஆட்சியில் செய்வதல்ல காரணம். அவர் அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாகப் பலரிடம் பணம் வாங்கி முறைகேடு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இதில் வினோதம் என்னவென்றால், அதிமுக ஆட்சிக்காலத்தில் செந்தில் பாலாஜி செய்ததாகச் சொல்லப்படும் இந்த முறைகேட்டினைக் குறித்து, இன்றைக்கு அவரைத் தாங்கிப் பிடிக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினே மேடையேறிக் குற்றம் சாட்டியிருப்பதுதான். செந்தில் பாலாஜி நெஞ்சு வலியால் துடித்த காட்சிக்கு நிகராக, அவரைக் குற்றம் சாட்டி ஸ்டாலின் பேசிய பழைய வீடியோத் துண்டும் சமூக ஊடகங்களைப் புயலெனத் தாக்கியது.
கைது விஷயம் தெரிந்ததும் உடனே களத்திலிறங்கியது மொத்த திமுகவும். ‘இது அரசியல் பழி வாங்கும் செயல், நாங்கள் மிசாவையே பார்த்தவர்கள்’ என உதயநிதி ஸ்டாலின் அன்றைய இரவே ஊடகங்களிடம் சொன்னார். ‘எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல, எச்சரிக்கை’ என மதுர பட வசனத்தைச் சென்னையிலிருந்து கொண்டு காணொளியில் பேசினார் முதல்வர். ‘ஏன் இவ்வளவு பதற்றம் முதல்வர் அவர்களே’ என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
கைது நடவடிக்கையின் ஊடாக நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதயக்குழாயில் மூன்று அடைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே அவருக்குப் புழல் சிறைக் கைதி எண்ணும் அறிவிக்கப்பட்டது. மருத்துவமனையிலேயே விசாரணையைத் தொடர்வோம் என அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.
செந்தில் பாலாஜி கவனித்து வந்த இரு துறைகளை இரு வேறு அமைச்சர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப் பரிந்துரை செய்தார் முதல்வர். இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்றது அந்தப் பரிந்துரை கடிதம். இலாகா மாற்றமெல்லாம் சரி தான். ஆனால் செந்தில் பாலாஜி அமைச்சராகத் தொடர ஆட்சேபம் தெரிவித்தார் ஆளுநர். மீண்டும் ஆளும் கட்சியோடு ஒரு மோதல் என்ற கணக்கில் இது சேரலாம். ஆனால், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்வார் எனத் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
முதல்வரே இவ்வளவு மெனக்கெட்டு குற்றம் சாட்டப்பட்ட அவரைச் சென்று பார்ப்பதும், மத்திய ஆளும் அரசான பாஜகவை இந்த விஷயத்தில் எதிர்ப்பதும் ஏன்? இவ்வளவு செல்வாக்குப் பெற்ற செந்தில் பாலாஜி உண்மையில் யார்? அவருடைய அரசியல் என்ன? ஆதி முதல் இப்போது கைது வரை என்ன நடந்தது என பின்னோக்கி ஓடிப்போய் பார்த்துவிடலாம்.
நேற்று வந்த செந்தில் பாலாஜிக்காக ஏன் முதல்வர் இவ்வளவு போராட வேண்டும்?
நேரடி அரசியலில் இல்லாத சபரீசன் ஏன் மருத்துவமனைக்குச் சென்று செந்தில் பாலாஜியைப் பார்க்க வேண்டும்?