சும்மாவே இருந்து லட்ச லட்சமாகப் பணம் சம்பாதிக்கிறார் ஒருவர். பெயர் சோஜி மொரிமோட்டோ. ஜப்பானைச் சேர்ந்தவர். 38 வயதான இவர், ஆண்டுக்கு அறுபது லட்சத்துக்குக் குறையாமல் சம்பாதித்து வருகிறார். ஆம். எதுவும் செய்யாமல் இருப்பதற்குத் தான், வாடிக்கையாளர்கள் இவருக்குப் பணம் தருகிறார்கள்.
சங்கதி இதுதான். ‘உணவகங்களுக்குத் தனியே செல்வதற்குக் கூச்சமாக இருக்கிறதா, குழு விளையாட்டில் ஆள் குறைகிறதா, உடனே என்னை ‘புக்’ செய்து கொள்ளலாம். ஒரு முறை பதிவு செய்தால் 10,000 யென். உங்களுக்குத் துணையாக எங்கும் வருவேன். ஆனால் ஒன்று. பெரிதாக எதுவும் செய்யமாட்டேன். சின்னதாக ஒரு சிரிப்பு, சம்பிரதாயத்திற்கு ஓரிரண்டு வார்த்தைகள். அவ்வளவே. மற்றபடி உங்கள் காரியம் முடியும் வரை நிழலென உடன் வருவேன்.’ என்பது தான் இவர் தரும் சேவை. இது குறித்து தன்னுடைய ட்விட்டர் / எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். அங்கே இவரைத் தொடர்பு கொள்ளலாம்.
சுவாரசியம் என்னவென்றால், உண்மையில் மக்களுக்கு இது பிடித்துவிட்டது. இதுவரை நான்காயிரத்திற்கும் அதிகமானவர்கள் இவரை புக் செய்துள்ளனர். அதாவது, நான்கு ஆண்டுகளில் நான்காயிரம் என்றால், நாள் ஒன்றுக்கு மூன்று பேர். பூங்காவில் சீசா விளையாடுவதற்கு, ரயில் ஏறும் போது நடைமேடையில் நின்று கொண்டு கையசைத்து டாட்டா சொல்லி வழியனுப்பி வைப்பதற்கு, இவ்வளவு ஏன், கணவன் ஏதேனும் டேட்டிங் தளத்தில் கணக்கு வைத்துதுள்ளானா எனத் தெரிந்துகொள்ளவேண்டும். அதைச் செய்யும் போது, உடன் ஒருவர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பவர்கள் கூட உடனே இவரை அழைத்து விடுகின்றனர்.
நல்ல எழுத்து நடை.