2. ஆம்பள சாமி, பொம்பள சாமி
இன்னொரு சந்நிதித் தெருவுக்குக் குடி போயிருந்தோம். திட்டமிட்டுச் செய்ததல்ல. அப்படி அமைந்தது.
அப்பாவுக்கு எப்போது பணி மாறுதல் வரும் என்று சொல்லவே முடியாது. தனது பணிக்காலத்தில் அவர் எத்தனை பள்ளிக்கூடங்களைக் கண்டிருப்பார் என்கிற கணக்கும் எனக்குச் சரியாகத் தெரியாது. அவரது திருமணத்துக்குப் பன்னிரண்டு வருடங்கள் கழித்து நான் பிறந்தபோது அவர் சோமங்கலத்தில் இருந்தார் என்று சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். காஞ்சீபுரத்தில் இருந்து தொடங்கும் என் முதல் நினைவுக்குப் பிறகு அவர் பணியாற்றிய பள்ளிக்கூடங்களை ஓரளவு சரியாக அறிவேன். இடைப்பட்ட நான்கு வருடங்கள் பற்றியும் அதற்கு முந்தைய காலக்கட்டம் பற்றியும் ஒன்றும் தெரியாது. குருவிக்காரக் குடும்பம் போல அவர் போகிற ஊர்களுக்கெல்லாம் மூட்டை கட்டிக்கொண்டு பின்னால் போய்க்கொண்டே இருந்திருக்கிறோம்.
இந்தப் புதிய இடத்தின் சந்நிதித் தெரு, காஞ்சிபுரம் சந்நிதித் தெருவைப் போலப் பரபரப்பானதல்ல. வீதியின் எந்தப் பக்கத்தில் இருந்து பார்த்தாலும் நூறு வயதைக் கடந்து, தேகம் முற்றிலும் சுருங்கிய கிழவி ஒருத்தி தரையில் கோரைப் பாய் விரித்து, ஒருக்களித்துப் படுத்திருப்பது போலக் காட்சியளிக்கும். முன்புறம் ஓட்டுச் சரிவும் திண்ணையும் மாடமும் கொண்ட புராதனமான வீடுகள் வீதியின் இருபுறமும் ஸ்கேல் வைத்துக் கோடு கிழித்த மாதிரி அணிவகுத்திருக்கும். இதர சந்நிதித் தெருக்களில் காணக்கிடைக்காத ஒரு பேரழகு இந்தத் தெருவுக்கு உண்டு. ஒவ்வொரு வீட்டு வாசலிலும் இரண்டு அசோக மரங்கள் இருக்கும். வீதி முனையில் நின்று பார்த்தால் சிறிய கோபுரமும் நாற்பது ஐம்பது அசோக மரங்களும் தெரியுமே தவிர, வீடுகள் தெரியாது.
அத்தி வரதரைத் தொடர்ந்து கோவூர் சுந்தரேசர். அடுத்து யார்? ஆவல் மேலிடுகிறது. சாத்தானின் கட்வுளைத் தேடி உடன் பயணிப்பதில் மகிழ்ச்சிதான். வாழ்த்துகள்.