“இசை ஒரு மகத்தான வரப்பிரசாதம்” என்று சொன்னார் நெல்சன் மண்டேலா. அப்படியான இசையைப் பல்லாயிரம் ஆண்டுகள் நேரடியாகக் கேட்டோம், பின்னர் ஒலித்தட்டு, ஒலிநாடா, குறுவட்டு என்று மாறி இன்று பெரும்பாலும் இசையை நாம் கேட்பது செல்பேசி செயலிகள் மூலமாக. அதில் பிரபலமாக இருப்பது ஸ்பாட்டிஃபை செயலி. இது அமெரிக்கத் தயாரிப்பில்லை, ஸ்வீடன் நாட்டில் உருவாக்கப்பட்டது என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா?
பச்சை வட்டத்திற்கு நடுவே வானொலி அலைகள் போன்று இருக்கும் இலச்சினை கொண்ட ஸ்பாட்டிஃபை செயலி தொடங்கப்பட்டது ஏப்ரல் 2006ஆம் ஆண்டு ஸ்டாக்ஹோம் நகரில். 2024 நிலவரப்படி ஸ்பாட்டிஃபையின் மொத்தப் பயனர்கள் எண்ணிக்கை 64 கோடிக்கு மேல். இதில் 25 கோடிக்கு மேற்பட்டவர்கள் மாதச் சந்தா கட்டி விளம்பரங்கள் இல்லாமல் பாடல்களைக் கேட்பவர்கள். இந்த விகிதம் இவர்களின் போட்டியாளர்கள் எல்லோரையும் விட மிக அதிகம்.
நிறுவனத்தைத் தொடங்கியது டேனியல் ஏக், அவருக்கு வழிகாட்டியாகவும் கூட்டாளியாகவும் இருந்தது மார்ட்டின் லொரென்ட்சன். ஒற்றையாளாக டேனியல் ஏக்கை அவருடைய தாயார் மட்டுமே வளர்த்தார். அதனால் ஏக்கின் நேர்காணல்களைக் கேட்டால் அம்மாவிடம் அவர் வைத்திருக்கும் அளவில்லாத அன்பை உணர முடியும். ஸ்டாக்ஹோம் நகரில் சாதாரணச் சூழலில் வளர்ந்தவர் ஏக். அவருடைய தாய் கெர்ஸ்டின் எலிசபெத், படி, படி என்று மட்டுமே சொல்லாமல் பலவற்றையும் பழகிக் கொள்ளத் தூண்டியிருக்கிறார். பென்டத்லான் எனப்படும் ஐவகை விளையாட்டுகளுக்குக்கானப் பயிற்சிகளிலும் சேர்த்துவிட்டிருக்கிறார். தனிமை விரும்பியான ஏக்கின் கூச்சத்தைப் போக்க நாடக வகுப்பிலும் சேர்த்துவிட்டிருக்கிறார்.
Add Comment