இனங்களுக்கிடையிலான மோதல், அதிகாரப் போட்டி, யுத்தம் என 75 ஆண்டுகளாக இலங்கை சீரழிந்திருக்கிறது. கடந்த காலங்களில் பிடிக்காதவர்களை ஒழித்துக் கட்டுவதற்காகவும், பிரச்சினைகளைத் தூண்டி விடுவதற்காகவும் அடியாள் வைத்துக் கொள்ளும் கலாசாரம் இருந்தது. முக்கியமாக, யுத்த காலத்தில். அடியாட்கள் கட்டளையிடுபவரின் நம்பிக்கைக்குப் படிப்படியாகப் பாத்திரமாவார்கள். அந்த நம்பிக்கை அவர்களுக்கு நாடாளுமன்ற மந்திரிப் பதவி வரைக்கும் உயர்வைப் பெற்றுத் தந்தது.
இந்த அடியாட்கள் பல்வேறு மட்டங்களிலும் இருந்தார்கள். பொதுவில் மட்டுமில்லாது போலிஸிலும், நேவியிலும், ஆர்மியிலும் இருந்தார்கள். யுத்தம் என்ற ஒற்றைப் போர்வை அனைத்தையும் மூடப் போதுமானதாக இருந்தது. யுத்தம் முடிந்து கொஞ்ச நாளிலேயே சாயம் வெளுக்க ஆரம்பித்தது. ஆனால் ஒவ்வொரு ஆட்சியாளர்களும் அதற்கு முன் ஆட்சியில் இருந்தவர்களின் ஆட்களை மட்டுமே வேட்டையாடினார்கள். இப்போது நிலைமையே வேறாக இருக்கிறது.
அனுர குமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கட்சி ஆட்சிக்கு வந்ததும் அதிகாரிகளுக்கு கிரீன் சிக்னல் கிடைத்தது. தங்கள் தரப்பில் மறைத்துப் பாதுகாக்க யாருமில்லை என்பது அனுரவின் ஆட்சிக்குக் கூடுதல் பலமானது. எங்கு வேண்டுமானாலும் போங்கள், யாரை வேண்டுமானாலும் பிடியுங்கள், நாங்கள் ஆதரவு தருகிறோம் என்றது அரசு. யெஸ் சார் என்று சல்யூட் அடித்துவிட்டு இந்தோனேஷியா, டுபாய், மலேஷியா என்று ஒவ்வொரு நாடுகளாகச் சென்று ஸ்கெட்ச் போட்டு குற்றவாளிகளுக்குக் கைவிலங்கு மாட்டி இழுத்து வந்தார்கள் இலங்கை பொலிஸாரும் அரச புலனாய்வாளர்களும். குற்றவாளிகளின் அடிமுடியைத் தேடிப் போனால் ஏதாவதொரு அரசியல்வாதியிடம்தான் போய் நிற்கிறது.














Add Comment