இலங்கை ஜனாதிபதி ரணிலும் அவர் பரிவாரங்களும் எதிர்பார்த்துக் காத்திருந்த சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இரண்டாம் தவணைப் பணம் கிடைப்பது பெரும் இழுபறிக்குள்ளாகி இருக்கிறது. நான்கு வருடங்களுக்கு 2.9 பில்லியன் டாலர் கடனுதவித்திட்டம் என்ற பெயரில் கடந்த மார்ச் மாதம் முந்நூற்று முப்பது மில்லியன் டாலர்களை முடிவே இல்லாத பேச்சுவார்த்தைகளின் பலனாக இலங்கை அரசு பெற்ற போது நாடெங்கும் மத்தாப்புக்கள் கொளுத்தப்பட்டன. ரணிலைக் கண்டாலே உலக நாடுகளின் தலைவர்கள் வெலவெலத்துப் போவதாகவும் அவரது ராஜதந்திரம்தான் இப்படிக் கடன்பெறப் பேருதவியாய் அமைந்ததாகவும், செப்டம்பர் மாதம் இரண்டாம் தவணைக் கடனையும் பெற்றுக் கொண்டு முதலீடுகளாய்க் கொண்டு வந்து கொட்டித் தீர்ப்பார் என்றும் அவரது அடிப்பொடிகள் கூவிக் கொண்டு இருந்தார்கள். ஆனால் துரதிர்ஷ்டம்…. செப்டம்பரும் முடிந்து விட்டது. தாங்க முடியாத புகழ்மாலைகளின் கனத்தால் ரணிலுக்குக் கண்ணூறு வந்துவிட்டது போலும்..இரண்டாம் தவணை இளிக்கிறது.
ஐ.எம்.எப். என்பது சும்மா படியளக்கும் பெருமான் அல்ல. ஐ.எம்.எப். பின் நிபந்தனைகள் முதுகை பிளேட்டால் கீறுவது போன்ற ஒன்று. அத்தனை வலியும் வேதனையுமிக்கது அது. கவ்பாய்த் தொப்பி போட்டுக் கொண்டு குதிரை மேல் உட்கார்ந்தவாறு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கட்டளையிட்டுக் கொண்டிருந்த வைஸ்ராயர்களின் நவீன வடிவம் தான் ஐ.எம்.எப். போன்ற சங்கதிகளும்.
Add Comment