மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்த உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார். மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும், தேவையான ஆலோசனைகளை வழங்கவும் இக்குழு செயல்படும். இக்குழுவின் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் உறுப்பினர்களாக முன்னாள் துணைவேந்தரும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான அசோக்வரதன் ஷெட்டி, தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவர் மு.நாகநாதன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய, மாநில அரசுக்கு இடையேயான உறவை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஆய்வு செய்வது அவசியம். இரு அரசுகளுக்கு இடையே நிதி சார்ந்த கொள்கைகள், நிர்வகிக்கும் அதிகாரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் ஆய்வுக்கு உட்படுத்துவது இன்றியமையாதது. இந்த உயர்நிலைக் குழு தனது இடைக்கால அறிக்கையை அடுத்த ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள்ளும், இறுதி அறிக்கையை இரண்டு ஆண்டுகளிலும் அரசுக்கு வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில், மாநிலங்களிடையே நல்லுறவை மேம்படுத்தும் பொருட்டு, மத்திய அரசு பல ஆணையங்களை நியமித்தது. நிர்வாக சீர்திருத்த ஆணையம் (1969) , மத்திய-மாநில உறவுகள் ஆணையம் (1988, 2010) , அரசியலமைப்பின் செயல்பாட்டை மறு ஆய்வு செய்வதற்கான தேசிய ஆணையம் (2002) போன்றவை மத்திய அரசால் உருவாக்கப்பட்ட ஆணையங்கள் ஆகும்.
Add Comment