இரயில் நிலையத்தின் கிடங்கு ஒன்று. அங்கே அனுமதியில்லாமல் சுவரோவியம் வரைகின்ற பையனைப் பிடிக்க ஓடி வருகிறார் பாதுகாவலர். உடன் அவருடைய நாயும். வழி எங்கும் பொற்காசுகள் சிந்தியிருக்கிறன. இப்படியான ஓர் ஓட்டம் கடந்த பத்தாண்டுகளாக நிற்காமல் போய்க் கொண்டேயிருக்கிறது என்றால் நம்ப முடியுமா? இதைப் பார்க்கிறவர்கள் உலகம் முழுவதிலும் இருந்து 400 கோடிக்கு அதிகமானோர் என்றால் இன்னும் ஆச்சரியமாக இருக்கிறதா?
செல்பேசியை அதிகம் பயன்படுத்துவோராக இருந்தால் உடனே கண்டுபிடித்திருப்பீர்கள். ஆம், இதுவரை குறிப்பிட்டது உலகளவில் மிகப் பிரபலமாக இருக்கும் “சப்வே சர்ஃபர்ஸ்” (Subway Surfers) விளையாட்டு செயலியைத் தான். இப்படியான செயலி எங்கே ஆரம்பித்தது என்று பார்க்கலாமா?
சப்வே சர்ஃபர்ஸ் விளையாட்டை 2012ஆம் ஆண்டு உருவாக்கியது டென்மார்க் நிறுவனமான சைபோ கேம்ஸ் (SYBO Games). நிறுவனத்தைத் தொடங்கிய ‘சில்வெஸ்டர் ரிஷோஜ் ஜென்சன்’ (Sylvester Rishøj Jensen) மற்றும் ‘போடி ஜான்-முல்லினர்’ (Bodie Jahn-Mulliner) ஆகியோரின் ஆங்கில முதல் பெயர்களின் கூட்டு சைபோ என்கிற பெயர்.
தனது பதினாறாம் வயதிலேயே இளைஞர்களுக்கான துணிகள், புது வகையான சுவர் வண்ணச் சாயங்கள், சறுக்கு மிதிகள் விற்கும் தொழிலைத் தொடங்கியவர் ‘போடி ஜான்’. டென்மார்க் நாட்டில் பல நகரங்களிலும் இதன் கிளைகள் இருந்திருக்கிறது. அந்தத் தொழிலைத் தாண்டி வேறு ஏதாவது செய்யலாம் என்று அவர் போய்ச் சேர்ந்தது ஓர் அனிமேஷன் பயிற்சிப்பட்டறையில். அங்கே தனது வருங்காலக் கூட்டாளியான ‘சில்வெஸ்டர் ரிஷோஜ்’ஜை சந்தித்துள்ளார். விபோர்க் நகரில் உள்ள தி அனிமேஷன் அசைவூட்டப் படங்கள் பயிற்சிப்பட்டறையில் மாணவர்களாக இருந்தபோது, இவர்கள் இருவரும் ஒரு காவலரிடமிருந்து தப்பி ஓடும் வாலிபனைப் பற்றிய ஒரு குறும் படத்தை உருவாக்கினார்கள். மிகவும் பாராட்டப்பட்ட அந்தக் குறும்படம் சப்வே சர்ஃபர்ஸ் விளையாட்டுக்கான அடித்தளமாக அமைந்தது.
Add Comment