இசை, நடனம், ஓவியம், வில்வித்தையில் இருந்து ஆடை அலங்காரம், சிகை அலங்காரம் வரை எல்லாமே கலை என்று முன்னர் பிரித்து வைத்தனர். இன்றோ புகைப்படம் எடுப்பது, திரைப்படம் எடுப்பதில் இருந்து ஆரம்பித்து ரோபோடிக்ஸ், கோடிங் வரை பலவற்றையும் கலைகளின் வரிசையில் சேர்த்து விட்டார்கள்.
செய்யும் செயல் எதுவாயினும் அதை நேர்த்தியுடன் திறம்படச் செய்தால் அது கலையாகிறது. அப்படிப் பார்த்தால் ஒரு உணவை அதன் சரியான பதத்தில், சரியான தொடுகறியுடன் சேர்த்து, எவ்விதம் சாப்பிட வேண்டுமோ அவ்விதத்தில் நேர்த்தியாக ரசித்து ருசித்துச் சாப்பிடுவதும் ஒரு கலை தானே..? அதைச் செய்யும் கலைஞர் யாராக இருந்தாலும் அவரைச் ‘சுவைஞர்’ என்று அன்போடு அழைக்க வேண்டுமல்லவா!
ஆனால் உலகம் அப்படியா அழைக்கிறது. கலைஞர்களைப் பழிப்பது என்பதே அல்வா சாப்பிடுவது போல இருக்கும். அதுவும் சுவைஞர்கள் என்றால் திருநெல்வேலி அல்வா சாப்பிடுவது போல அல்லவா இருக்கும். சாப்பாட்டு ராமன், தீனிப்பண்டாரம் என்று எத்தனை அவப்பெயர்கள். அந்த அவப்பெயர்களை எல்லாம் களைந்துவிட்டு ‘சுவைஞர்’ என்ற பெயரை நிலைபெறச் செய்யவேண்டும் என்றுச் சபதம் எடுத்திருக்கிறேன்.
Add Comment