ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி ஸ்மரணானந்தா, கடந்த மார்ச் 26-ஆம் தேதி மகாசமாதி அடைந்தார்.
மேற்கு வங்க மாநிலத்திலிருக்கும் பேளூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது ராமகிருஷ்ண மடம். 2017-ஆம் ஆண்டு முதல் அதன் தலைவராக இருந்து வருபவர் சுவாமி ஸ்மரணானந்தா. உடல்நலக் குறைவு காரணமாக கொல்கத்தாவிலிருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது உயிர், செவ்வாய்க்கிழமை மாலை 8.14 மணியளவில் பிரிந்திருக்கிறது.
தனது இருபத்தியிரண்டாவது வயதில் அகத்துள் எழுந்த தேடல் காரணமாக மடத்தில் சேர்ந்து துறவு பூண்டவர் சுவாமி ஸ்மரணானந்தா. அன்றிலிருந்து தனது தொண்ணூற்று நான்காவது வயது வரையிலும் மடத்தின் ஆன்மீக/சமூக சேவைப் பணிகளுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.
சுவாமி ஸ்மரணானந்தாவின் இயற்பெயர் எதுவென்பதைப் பற்றிய குறிப்புகள் இல்லை. அவர், தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூருக்கு அருகிலுள்ள அண்டமி எனும் கிராமத்தில் பிறந்தார். சிறுவயதில் தாய் இறந்துவிடவே அத்தையின் அரவணைப்பில் வளர்ந்தார். பள்ளிப் படிப்பை சென்னை மாகாணத்தில் முடித்த ஸ்மரணானந்தா தந்தையின் வேலை காரணமாக நாசிக்கிற்குக் குடிபெயர்ந்தார். அங்கு வணிகவியலில் டிப்ளமா முடித்தார்.
Add Comment